Published : 16 Aug 2017 10:44 AM
Last Updated : 16 Aug 2017 10:44 AM

காரைக்குடி - கோவை அணிகள் மோதல்

டிஎன்பிஎல் 2-வது சீசன் தொடரில் இன்று இரவு 7.15 மணிக்கு நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறும் வெளியேற்றும் சுற்றில் காரைக்குடி காளை - லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

லீக் போட்டிகளின் முடிவில் காரைக்குடி காளை அணி 4 வெற்றிகள், 3 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்தது. லைகா கோவை கிங்ஸ் அணி 3வெற்றி, 2 போட்டிகள் முடிவில்லாத நிலையில் 8 புள்ளிகளுடன் தகுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அந்த அணி கடைசி 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றேத் தீர வேண்டும் என்ற நெருக்கடியில் வெற்றியை வசப்படுத்தியது. இது அந்த அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

காரைக்குடி காளை அணியின் தொடக்க வீரர்களான விஷால் வைத்யா, எஸ்.அனிருதா ஜோடி இந்த தொடரில் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். இன்றும் இவர்கள் அசத்தக்கூடும். அனிருதா இந்த தொடரில் 208 ரன்களும், விஷால் வைத்யா 177 ரன்களும் சேர்த்துள்ளனர். அதே வேளையில் கேப்டன் பத்ரிநாத்தின் பார்ம் அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அவர் இந்த தொடரில் வெறும் 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

அதிரடி வீரர் ஷாஜஹான் அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பவராக உள்ளார். இந்த சீசனில் அவர், 184 ரன்கள் சேர்த்துள்ளார். அதேபோல், 19 வயதான லோகேஷ்வரும் சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறார். பந்து வீச்சில் மோகன் பிரசாத் சிக்கனமாக ரன்களை வழங்கி பலம் சேர்க்கிறார். இந்த சீசனில் அவர், 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

கோவை அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து, பின்னர் சரியான நேரத்தில் வெற்றி பெற்று தகுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அந்த அணியில் முரளி விஜய் அதிரடியாக விளையாடி வருகிறார். அனிருத் சீதா ராம், சூர்யபிரகாஷ், அக் ஷய் ஸ்ரீநிவாசன், எம்.மொகமது ஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள கே.விக்னேஷ் மற்றும் ஹரிஷ் குமார் இருவரும் எதிரணிக்கு நெருக்கடித் தரக்கூடும். சுழற்பந்துவீச்சில் அஜித் ராம், பி.அருண் ஆகியோரும் சவால் தரக்கூடும் என கருதப்படுகிறது.

இரு அணிகளும் இதற்கு முன்னர் இரு முறை மோதி உள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 18-ம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும்.

-நன்றிஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x