Published : 30 Aug 2017 07:38 PM
Last Updated : 30 Aug 2017 07:38 PM

கண்ணீருடன் விடைபெறுகிறோம்: சனத் ஜெயசூர்யா உருக்கமான கடிதம்

இலங்கை அணியின் தொடர் தோல்விகளால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதையடுத்து மனம் வருந்தி தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூர்யா உட்பட உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் சனத் ஜெயசூர்யா இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு எழுதிய உருக்கமான கடிதம் வருமாறு:

என் இருதயத்தில் துயரத்தைத் தாங்கி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன், சக தேர்வாளர்களுடன் நீண்ட நேரம் ஆலோசித்த பிறகு நாங்கள் ராஜினாமா செய்வதென ஏகமனதாக முடிவெடுத்தோம்.

நாட்டை பலமட்டங்களிலும் பிரதிநிதித்துவம் செய்த வீர்ர், முன்னாள் கேப்டன், நடப்பு தேர்வுக்குழு சேர்மன் என்ற அடிப்படையில், கடந்த ஞாயிறன்று மைதானத்தில் நடந்தது கடைசியாக இருக்கட்டும் என்று நினைத்தோம், கிரிக்கெட் எப்போதும் என் வாழ்க்கையாகவே இருந்து வருகிறது. எனவே நம் ரசிகர்களே நம் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகவும் வலிதருவதாக இருக்கிறது.

இந்த ஆண்டு மோசமாக அமைந்தது என்பதை ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் ஓராண்டுக்கு முன்பாகத்தான் ஆஸ்திரேலியாவை 3-0 என்று வீழ்த்தினோம். அது மறக்க முடியாத ஒரு கணம். திறமையான வீரர்கள் பலர் இந்த அணியில் உள்ளனர், நிச்சயம் இவர்கள் அணியை உச்சத்துக்கு இட்டுச் செல்வார்கள். இலங்கை கிரிக்கெட்டுக்காக தேவை ஏற்படும்போது எப்போது வேண்டுமானாலும் உதவத் தயாராக இருக்கிறோம்.

1996 (உலகக்கோப்பை வெற்றி) வீரர்கள் எப்போதும் இலங்கை கிரிக்கெட்டின் அபாரமான நாட்களை ஏக்கத்துடன் நினைவு கூர்கிறோம். எங்களுக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட் வாரியத்தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கடைசியாக அணியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் எங்கள் கண்களில் நீர் நிரம்ப விடைபெறுகிறோம், ஆனால் எங்கள் தலை நிமிர்ந்துதான் உள்ளது. அனைத்து ரசிகர்களிடத்திலும் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். இந்த வீரர்கள் நிச்சயம் வெற்றிக்கு இட்டுச் செல்வார்கள். வீரர்களுக்கு நாங்கள் கூறுவதெல்லாம், உங்கள் திறமைகளில் நம்பிக்கை வையுங்கள். ரசிகர்களிடத்தில் நம்பிக்கை வையுங்கள். அவர்கள் உங்களுடன் தான் இருக்கப் போகிறார்கள். ஒரு அணியாக, ஒருநாடாக நாம் திரண்டு மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு சனத் ஜெயசூரியா தனது கடிதத்தில் உருக்கமாகக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x