Last Updated : 17 Aug, 2017 10:05 AM

 

Published : 17 Aug 2017 10:05 AM
Last Updated : 17 Aug 2017 10:05 AM

ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றில் கலந்து கொள்ள ரஷ்ய டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரும் 28-ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இந்தத் தொடர் செப்டம்பர் மாதம் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் கலந்து கொள்ள 5 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

ஷரபோவா இதற்கு முன்னர் அமெரிக்க ஓபனின் பிரதான சுற்றில் நேரடியாக 10 முறை கலந்துகொண்டுள்ளார். கடைசியாக அவர், 2014-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுவரை முன்னேறியிருந்தார். 30 வயதான ஷரபோவா கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்குப் பின்னர் எந்தவிதமான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ஊக்க மருந்து பிரச்சினையால் அவருக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை 15 மாதங்களாக குறைக்கப்பட்டதால் கடந்த ஏப்ரல் முதல் அவர், சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.

தற்போது தரவரிசையில் 148-வது இடத்தில் உள்ள அவர், போட்டித் தரவரிசையில் ரேங்கிங் இல்லாத வீராங்கனையாக களமிறங்க உள்ளார். கடந்த 2003-ம் ஆண்டு அறிமுக வீராங்கனையாக அவர் களமிறங்கிய பின்னர் தற்போது தான் ரேங்கிங் இல்லாத வீராங்கனையாக அமெரிக்க ஓபன் தொடரை எதிர்கொள்ள உள்ளார். 2006-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான ஷரபோவாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் தொடரில் வைல்டு கார்டு மறுக்கப்பட்டது. அதேவேளையில் கடந்த மாதம் நடைபெற்ற விம்பிள்டன் தொடரில் காயம் காரணமாக ஷரபோவா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x