Published : 10 Aug 2017 10:44 AM
Last Updated : 10 Aug 2017 10:44 AM

பெங்கால் அணியை வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ்

புரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

நாக்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 10-வது நிமிடத்தில் இரு அணிகளும் தலா 5 புள்ளிகள் சேர்க்க ஆட்டம் 5-5 என சமநிலையில் இருந்தது. இந்த நிலையில் பெங்கால் அணியின் விநோத் குமார் ரைடு மூலம் 2 புள்ளிகள் சேர்க்க அந்த அணி 7-5 என்ற முன்னிலையை பெற்றது. இதையடுத்து கேப்டன் ரோஹித் குமார் அடுத்தடுத்த ரைடுகளில் புள்ளிகள் சேர்க்க பெங்களூரு அணி 9-8 என முன்னிலைக்கு வந்தது. தொடர்ந்து அசத்திய பெங்களூரு அணி முதல் பாதியில் 12-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

2-வது பாதியில் பெங்கால் அணி சீராக புள்ளிகள் சேர்த்து 16-16 என்ற சமநிலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான அஜெய் குமார் ஒரே ரைடில் 4 புள்ளிகளை அள்ளினார். இதைத் தொடர்ந்து பெங்களூரு 4 முதல் 5 புள்ளிகள் முன்னிலையை தக்கவைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தியது.

4 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் பெங்களூரு அணி 28-22 என வலுவான நிலையில் இருந்தது. முடிவில் பெங்களூரு அணி 31-25 புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் அஜெய் குமார் ரைடில் 8 புள்ளிகளும், ஆஷிஸ் குமார் டேக்கிள் மூலம் 5 புள்ளிகளும் பெற்றனர்.பெங்களூரு அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. ஒரு ஆட்டத்தை டிரா செய்திருந்தது. அதேவேளையில் தொடர்ச்சியாக இரு வெற்றிகளை பெற்ற பெங்கால் அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

இன்றைய ஆட்டம்

புரோ கபடி லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புனேரி பால்தான் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 3-வது ஆட்டமாகும். இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ள தமிழ் தலைவாஸ் முதல் வெற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது. மேலும் பெங்களூரு அணியை இந்த சீசனில் 2-வது முறையாக எதிர்கொள்கிறது.

கடந்த ஆட்டத்தில் அந்த அணிக்கு எதிராக ஒரு புள்ளி வித்தியாசத்தில் (32-31) தோல்வியை சந்தித்திருந்தது. இந்த தோல்விக்கு தமிழ் தலைவாஸ் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கும். - நன்றி ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x