Published : 27 Aug 2017 01:40 PM
Last Updated : 27 Aug 2017 01:40 PM

துப்பாக்கி சுடும் போட்டியில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக தமிழகம் சாம்பியன்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

துப்பாக்கிச் சுடும் போட்டியில் கடந்த 2011 முதல் 2016 வரை தொடர்ந்து 6 ஆண்டுகளாக சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழகம் வென்று வருகிறது என முதல்வர் பழனிசாமி கூறினார்.

தென் மண்டல துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் பரிசுகள் வழங்கும் விழா திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் 3-வது பட்டாலியனில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் கே. பழனிசாமி பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

‘வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு அகத்தியன்’ என்பார்கள். வில் வித்தையில் மிகச் சிறந்த வீரனாக விளங்கிய அர்ச்சுனனின் பெயர் மகாபாரதத்தில் சிறந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. குறிதவறாமல் அம்பு எய்வதற்கு இன்றைக்கும் மக்கள் அர்ச்சுனனையே உதாரணமாகக் கூறுகிறார்கள் என்றால் வில்வித்தை என்பது மனித வரலாற்றில் எத்தனை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை நாம் உணர முடியும். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்த பின்னர் துப்பாக்கிச் சுடுதலும் அதே அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜெயலலிதா முயற்சியால்

1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது, தமிழ்நாடு காவல் துறையிடம் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போராட போதிய ஆயுதங்கள் இல்லாததை உணர்ந்து, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர், நிதித் துறை அமைச் சர் ஆகியோரைச் சந்தித்து, தமிழ் நாடு காவல் துறையை நவீனப்படுத்த ரூ.30 கோடி நிதி வழங்க வலியுறுத்தினார்.

இதையடுத்து, மத்திய அரசின் நிதி உதவியுடன் ஏ.கே.47 ரகம் மற்றும் எம்.பி.5 போன்ற நவீன ஆயுதங்கள், நவீன வாகனங்கள், டிஜிட்டல் மைக்ரோவேவ் தொலைத் தொடர்பு இணைப்புமுறை உள்ளிட்டவைகளை வாங்கி தமிழ்நாடு காவல் துறையை நவீனப்படுத்தினார்.

தொடர்ந்து சாம்பியன்

சென்னை ரைபிள் கிளப், 2003-ம் ஆண்டில் தன் பொன் விழாவைக் கொண்டாடியபோது ரூ.4.85 கோடி செலவில் இந்த அரங்கம் ஒலிம்பிக் தரத்துக்கு மேம்படுத்தப்பட்டது. மேலும், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு காவல் துறை துப்பாக்கி சுடும் குழுவினரின் பயிற்சிக்காக தளவாடப் பொருட்கள் வாங்குவதற்கு 2013-ம் ஆண்டு ரூ.61.50 லட்சம் வழங்கப்பட்டது. ஏற்கெனவே 2001, 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருந்தாலும், 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்து தமிழ்நாடு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வருகிறது.

மிகவும் திறமை மிக்க பல துப்பாக்கிச் சுடும் வீரர்களை தமிழ்நாடு உருவாக்கியிருக்கிறது. ரூபா ஸ்ரீநாத் கோலாலம்பூரில் நடைபெற்ற 16-வது காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றிருப்பதுடன், அர்ஜுனா விருது பெற்ற முதல் தமிழ்நாட்டு வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன், திருவள்ளூர் தொகுதி எம்.பி. டாக்டர் வேணுகோபால், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், சென்னை ரைபிள் கிளப் தலைவர் டி.வி.சீதாராமா ராவ், செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x