Published : 30 Aug 2017 05:44 PM
Last Updated : 30 Aug 2017 05:44 PM

முச்சதம்: 300-வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் தோனி; சுவையான தகவல்கள்

நொந்து நூலான இலங்கை அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி 31-ம் தேதியன்று நடைபெறவுள்ள நிலையில் 300-வது ஒருநாள் போட்டியில் களம் காண்கிறார் ‘தல’ மகேந்திர சிங் தோனி.

300 ஒருநாள் போட்டிகளில் களம் காணும் 6-வது இந்திய வீரராவார் தோனி.

300-வது ஒருநாள் போட்டியில் இறங்கவுள்ள தோனி இதுவரை 9,608 ரன்களை எடுத்துள்ளார், இதில் 10 சதங்கள், 65 அரைசதங்கள் அடங்கும். சராசரு 51.93. இதில் 736 பவுண்டரிகளையும் 209 சிக்சர்களையும் அடித்துள்ள தோனி, விக்கெட் கீப்பராக 278 கேட்ச்களுடன் 99 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார். நாளை 100-வது ஸ்டம்பிங்கை தோனி நிகழ்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ரைக் ரேட் 88.47.

300-வது ஒருநாள் போட்டியில் மறக்க முடியாத இன்னிங்ஸை ஆடுவாரா தோனி என்று ரசிகர்களிடையே ஆவல் எழுந்துள்ளது. 300 ஒருநாள் போட்டிகளில் ஆடியும் சராசரியை 50க்கும் மேல் வைத்திருப்பது பெரிய ஆச்சரியகரமானதுதான், அதுதான் தோனியின் தனிச்சிறப்பு.

300-வது ஒருநாள் போட்டி மூலம் சச்சின் டெண்டுல்கர் (463), ராகுல் திராவிட் (344), அசாருதீன் (334), கங்குலி (311), யுவராஜ் சிங் (304) ஆகியோர் அடங்கிய டாப் வீரர்கள் பட்டியலில் தோனி இணைகிறார்.

விக்கெட் கீப்பிங்கில் இதுவரை தோனி தவறுகள் செய்ததில்லை என்பது மிகப்பெரிய விஷயமாகும், அவரது பேட்டிங் மாற்றத்தில் குறை காண்பவர்கள் கூட தோனியின் கீப்பிங் மீது குறை காண முடியாது. அப்பழுக்கற்ற ஒரு கீப்பராகச் செயல்பட்டு வருகிறார் தோனி.

இலங்கைக்கு எதிராக 61 ஒருநாள் போட்டிகளில் 2261 ரன்களை 64.60 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

மேலும் தோனி தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 45.96 என்ற சராசரியும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 41.83 என்ற சராசரியும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மட்டும் குறைவாக 31.60 என்ற சராசரியும் வைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அயல்நாடுகளில் 127 போட்டிகளில் 4038 ரன்களை 48.65 என்ற சராசரியிலும் இந்தியாவில் 108 போட்டிகளில் 3976 ரன்களை 57.62 என்ற சராசரியிலும் எடுத்துள்ளார் தோனி. 2017-ம் ஆண்டில் தோனி 16 போட்டிகளில் 498 ரன்களை எடுத்துள்ளார், சராசரி 83 ரன்களாகும். எனவே நாளை தோனி 2 ரன்களை எடுத்தால் இந்த ஆண்டில் 500 ரன்களை எடுத்தவராவார். ஒரு ஸ்ட்ம்பிங் செய்தால் 100 ஸ்டம்பிங்குகள் என்ற மைல்கல்லையும் எட்டுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x