Published : 16 Aug 2017 10:46 AM
Last Updated : 16 Aug 2017 10:46 AM

5 ஆட்டங்களில் விளையாட ரொனால்டோவுக்கு தடை

விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட ரியல் மாட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 5 ஆட்டங்களில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பானிஷ் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சூப்பர் கோபா கால்பந்து தொடரின் முதல் கட்ட ஆட்டத்தில் நேற்று முன்தினம் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, பார்சிலோனா அணியை எதிர்த்து விளையாடியது. கேம்ப் நவ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 80-வது நிமிடத்தின் போது ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார்.

இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக அவர், தனது சட்டையை கழற்றி சுழற்றினார். இது விதிமுறைகளின் படி தவறாகும். மேலும் சட்டை இல்லாமல் அவர், தனது உடலை முறுக்கேற்றியபடி பாவணைகள் செய்தார். இதையடுத்து நடுவர் ரிகார்டோ டி பர்கோஸ் பென்கோடெக்ஸியா, ரொனால்டோவுக்கு மஞ்சள் அட்டை காண்பித்தார்.

சிறிது நேரத்தில் பார்சிலோனா கோல் பகுதிக்குள் சென்ற ரொனால்டோ, பெனால்டி பெறும் வகையில் கீழே விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து 2-வது முறையாக ரொனார்டோவுக்கு நடுவர் ரிக்கார்டோ மஞ்சள் அட்டை காண்பித்தார். ஒரே ஆட்டத்தில் இரு மஞ்சள் அட்டை பெற்றதால் உடனடியாக ரொனால்டோவுக்கு ரெட் கார்டு வழங்கினார் நடுவர் ரிக்கார்டோ. இதனால் களத்தில் இருந்து ரொனால்டு வெளியேற நேர்ந்தது. இந்த நேரத்தில் ரொனால்டோ, நடுவரின் முதுகில் கைவைத்து தள்ளினார்.

இதையடுத்து ரெட் கார்டு பெற்றதற்கு ஒரு ஆட்டத்தில் தடையும், நடுவரை தள்ளிவிட்டதற்கு 4 ஆட்டத்தில் தடை என மொத்தம் 5 ஆட்டத்தில் விளையாட ரொனால்டோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பார்சிலோனா அணிக்கு எதிரான 2-வது கட்ட போட்டியில் ரொனால்டோ விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரொனால்டோவுக்கு ரூ.2.87 லட்சமும், ரியல் மாட்ரிட் அணிக்கு ரூ.1.32 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் இந்த தடையை எதிர்த்து ரொனால்டோ மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x