Published : 23 Aug 2017 10:27 AM
Last Updated : 23 Aug 2017 10:27 AM

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கொரிய வீராங்கனையை பந்தாடி3-வது சுற்றில் நுழைந்தார் சிந்து; ஆடவர் பிரிவில் அஜெய் ஜெயராம், சாய் பிரணீத் முன்னேற்றம்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பி.வி.சிந்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா, போலந்தின் அபியானை எதிர்த்து விளையாடினார். இதில் சமீர் வர்மா 21-8, 17-4 என முன்னிலை வகித்த போது காயம் காரணமாக அபியான் வெளியேறினார். இதனால் சமீர் வர்மா 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 21-13, 21-12 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் செர்ஜி சிரான்டை எளிதாக வீழ்த்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் ரிதுஅபர்னா தாஸ், பின்லாந்தின் மிக்கிலாவை எதிர்கொண்டார். இதில் ரிதுஅபர்னா 2-0 என முன்னிலை வகித்த போது மிக்கிலா காயம் காரணமாக விலகினார். இதனால் ரிதுஅபர்னா தாஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி லாட் 17-21, 21-10, 21-19 என்ற செட் கணக்கில் போராடி இங்கிலாந்தின் சோலி பிர்ச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். தொடரின் 2-வது நாளான நேற்று கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சுமித் ரெட்டி ஜோடி, சீனாவின் வாங், ஹனுங் டாங்பிங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. சுமார் 58 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 17-21, 21-18, 5-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, மணீஷா ஜோடி 24-22, 21-17 என்ற நேர் செட்டில் ஹாங் காங்கின் டாம் சுன் ஹே, டிஸூ யா ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

சிந்து வெற்றி

மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் நேரடியாக களமிறங்கிய இந்தியாவின் பி.வி.சிந்து, 42-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் ஹிம் ஹயோ மினுடன் மோதினார். போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சிந்து தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அவர் 7-0 என முன்னிலைப் பெற்றார். 0-8 என பின்தங்கிய நிலையிலேயே ஹிம் ஹயோ மினால் முதல் புள்ளியை பெற முடிந்தது. எனினும் சீரராக புள்ளிகள் சேர்த்த அவர் 8-12 என நெருங்கி வந்தார்.

ஆனால் சிந்து சரியான இடங்களில் பந்தை பிளேசிங் செய்து 16-9 என்ற முன்னிலைக்குச் சென்றார். தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடிய சிந்து முதல் செட்டை 21-16 என கைப்பற்றினார். 2-வது செட்டில் ஹிம் ஹயோ மின் தொடக்கத்திலேயே புள்ளிகள் சேர்க்க 2-2 என சமநிலை ஏற்பட்டது. சிந்து அடுத்தடுத்து புள்ளிகள் சேர்த்து 8-3 என்று முன்னிலையை ஏற்படுத்தினார். சிந்து 10 புள்ளிகளை நெருங்கிய நிலையில், ஹிம் ஹயோ மின் சீராக புள்ளிகள் சேர்க்க 8-10 என மிக நெருங்கி வந்தார்.

இந்த சூழ்நிலையில் ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்த சிந்து 18-12 என வலுவான முன்னிலையை பெற்றார். தொடர்ந்து சிறந்த திறனை வெளிப்படுத்திய சிந்து இந்த செட்டை 21-14 என தனதாக்கினார். முடிவில் 49 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-16, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். சர்வதேச போட்டிகளில் ஹிம் ஹயோ மினை, சிந்து வீழ்த்துவது இது 4-வது முறையாகும். இருவரும் இதுவரை நேருக்கு நேர் 5 முறை மோதி உள்ளனர். இதி ஹிம் ஹயோ மின் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அஜெய் ஜெயராம், 114-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் லூகா ராபரை எதிர்கொண்டார். 31 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அஜெய் ஜெயராம் 21-14, 21-12 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாய் பிரணீத் 21-18, 21-17 என்ற நேர் செட்டில் ஹாங் காங்கின் வெய் நானை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x