Last Updated : 31 Jul, 2017 10:19 AM

 

Published : 31 Jul 2017 10:19 AM
Last Updated : 31 Jul 2017 10:19 AM

2-வது டெஸ்ட்டில் சிறப்பாக ஆடுவோம்: ரங்கனா ஹெராத் நம்பிக்கை

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என்று இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரும், முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருந்தவருமான ரங்கனா ஹெராத் தெரிவித்தார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது குறித்து ரங்கனா ஹெராத் நிருபர்களிடம் கூறியதாவது:

காலே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 600 ரன்களைக் குவித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த டெஸ்ட் போட்டியில்தான் ஒரு அணி எங்களுக்கு எதிராக 600 ரன்களைக் குவித்துள்ளது. இந்த போட்டியை வைத்து எங்களைத் திறமை குறைந்த அணி என்று மதிப்பிட வேண்டாம். நாங்கள் சிறந்த அணிதான் என்பதை மீண்டும் நிரூபிப்போம்.

காலே மைதானத்தில் உள்ள ஆடுகளம் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும். ஆனால் இப்போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் உதவாமல் ஏமாற்றம் அளித்தது. அதேபோல் எங்கள் அணியின் ஆல்ரவுண்டரான அசேலா குணரத்னே காயம் காரணமாக முதல் நாளே போட்டியில் இருந்து வெளியேறினார். இதுவும் எங்கள் தோல்விக்கு ஒரு காரணம். ஆனால் நாங்கள் இதை ஒரு சாக்காக சொல்லமாட்டோம். காலே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் எங்களை விட சிறப்பாக செயல்பட்டது.

காலே டெஸ்டில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது. இப்போட்டியில் நாங்கள் செய்த தவறுகள் என்ன என்பதை கண்டறிந்து திருத்திக்கொள்வோம். 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடுவோம். அடுத்த டெஸ்ட் போட்டியில் எங்கள் கேப்டனான தினேஷ் சந்திமால் ஆடுவாரா என்று தெரியாது. ஆனால் அவர் ஆடவேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு ரங்கனா ஹெராத் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x