Published : 18 Aug 2016 09:28 PM
Last Updated : 18 Aug 2016 09:28 PM

ஒலிம்பிக் பாட்மிண்டன்: பி.வி.சிந்துவுக்கு வெள்ளி உறுதி; தங்கம் வெல்ல வாய்ப்பு

ரியோ ஒலிம்பிக் மகளிர் பாட்மிண்டன் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நொஸோமி ஒகுஹாராவை 21-19, 21-10 என்ற நேர் செட்களில் அபாரமாக ஆடி வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து

இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளி உறுதியாகியுள்ளது. தங்கப்பதக்கத்திற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. தங்கப்பதக்க போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை கரோலினா மாரினைச் சந்திக்கிறார் சிந்து.

தனது அபார ‘ஸ்மாஷ்’கள் மூலம் ஜப்பான் வீராங்கனையை 21-19, 21-10 என்று முழு ஆதிக்கம் செலுத்தி தங்கப்பதக்க சுற்றுக்கு முன்னேறினார்.

அதிரடி ஸ்மாஷ்கள்!

பலத்த எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்களின் இந்தியா இந்தியா என்ற பலத்த ஆதரவு கோஷங்களுடன் ஆடிய பி.வி.சிந்துவுக்கு அவரது உயரம் சாதகமாக அமைந்தது. ஜப்பான் வீராங்கனை உலகத் தரவரிசையில் 6-ம் நிலையில் இருந்தாலும் சிந்துவின் அதிவேக ஸ்மாஷ்களை எடுக்க முடியாமல் திணறினார்.

குறிப்பாக 2-வது செட்டில் 10-12 என்ற சமநிலையிலிருந்து தொடர்ச்சியாக 11 புள்ளிகளை சிந்து வென்றிருக்கிறார் என்றால் ஆதிக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

முதல் செட்டில் அபாரமாகத் தொடங்கிய சிந்து தொடக்கத்திலேயே ஜப்பான் வீராங்கனை ஒகுஹாராவை பின்னுக்குத் தள்ளினார், இதனால் சிந்துவின் உயரமான ஷாட்களை சற்றே உயரம் குறைந்த அவர் எடுப்பதில் துல்லியமில்லாமல் போக நிறைய தவறுகளை இழைத்தார் இதனால் 4-1 என்று முன்னிலை பெற்றார். அதன் பிறகு நல்ல கிராஸ் கோர்ட் ராலியில் அருமையான டிராப் ஷாட்டில் சிந்து 8-5 என்று முன்னேறினார்.

முதல் குடிநீர் இடைவேளையின் போது சிந்து முழு ஆதிக்கத்துடன் 11-6 என்று இருந்தார். ஆனால் 12-8 என்ற நிலையில் ஒகுஹாரா இரண்டு பாடிலைன் ஷாட்களை அடித்து 2 புள்ளிகளுடன் 14-10 என்று இருந்தது. பிறகு 16-13, 17-15 என்று சற்றே இடைவெளி குறைந்தது. ஆனால் திடீரென இரண்டு தவறுகளை சிந்து இழைத்தாலும் ஒரு ஸ்மாஷ் மூலம் 19-18லிருந்து 20-18 சென்றார். அதன் பிறகு ஒரு ராலியில் சிந்துவை முறியடித்து ஒகுஹாரா 19 புள்ளிகளுக்கு வந்தார். 20-19 என்று சிந்து முன்னிலை பெற்ற போது ஒகுஹாரா நெட்டில் அடிக்க முதல் செட்டை சிந்து 21-19 என்று கைப்பற்றினார். 27 நிமிடங்களில் முதல் செட் சிந்துவின் கைக்கு வந்தது.

2-வது செட்டில் தொடர்ச்சியாக 11 புள்ளிகள்: சிந்துவின் தொடர்ந்த ஆதிக்கம்

2-வது செட்டில் சிந்து சர்வை தொடங்க சில அபாரமான ரிடர்ன்கள் மூலம் சிந்து 3-0 என்று முன்னிலை பெற்றார். ஆனால் சிந்து இரண்டு ஷாட்களை நெட்டில் அடிக்க ஒகுஹாரா 3-3 என்று சமன் செய்தார். தொடர்ந்து இருவரும் சம அளவில் ஆட்டத்திறனை வெளிப்படுத்த 5-5 என்று ஆனது. இந்த நிலையில் ஒகுஹாராவின் இரண்டு தீர்மானகரமான ஷாட்களால் அவர் 7-5 என்று முன்னிலை பெற்றார். ஆனால் மீண்டும் சிந்துவுக்கு அவரது ஸ்மாஷ்கள் கைகொடுக்க 2 ஸ்மாஷ்கள் மூலம் 7-7 என்று சமன் செய்தார். அதன் பிறகு ஒரு அபாரமான டிராப் ஷாட் சிந்துவுக்கு 10-9 என்று முன்னிலை கொடுத்தது.

11-10 என்ற நிலையில் செட் யார் பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலையில் 3 அபாரமான, நம்ப முடியாத ஸ்மாஷ் ஷாட்கள், டிராப் ஷாட்கள் மூலம் சிந்து 15-10 என்று முன்னிலை பெற்றார். அதிலிருந்து 21-10 என்று அபாரமாக வெற்றி பெற்றார், 2-வது செட்டில் தொடர்ச்சியாக 11 புள்ளிகள் பெற்று ஆதிக்கத்தை நிலைநாட்டினார் சிந்து, தங்கப்பதக்கச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். தனது அறிமுக ஒலிம்பிக் போட்டியிலேயே தங்கச்சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் சிந்து.

இறுதிப் போட்டியில் உலக நம்பர் 1 வீராங்கனை கரோலினா மாரினைச் சந்திக்கிறார் சிந்து, வெள்ளி உறுதியாகிவிட்ட நிலையில் தங்கம் வெல்லும் போட்டியில் சிந்துவை வீழ்த்துவது கரோலினா மாரினுக்கு அவ்வளவு சுலபமாகி விடாது என்று உறுதியாக நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x