Published : 15 Jun 2016 09:25 AM
Last Updated : 15 Jun 2016 09:25 AM

யூரோ கோப்பை கால்பந்து: பெல்ஜியத்தை வீழ்த்தியது இத்தாலி

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் லயானில் நடைபெற்ற ஆட்டத்தில் இ பிரிவில் இடம் பெற்றுள்ள இத்தாலி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தை எதிர்த்து விளையாடியது. 32-வது நிமிடத்தில் லியானார்டோ பொனிசி கொடுத்த நீண்ட தூர பாஸை, ஜியாஜெர்னி கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி முன்னிலை பெற்றது.

90 நிமிடங்கள் முடிந்ததும் கூடுதலாக வழங்கப்பட்ட 2 நிமிடங்களில் அன்டோனியா ஹன்ட்ரிவா கொடுத்த கிராஸை பெற்று கிராஸினோ பெலி மேலும் ஒரு கோல் அடிக்க 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது. இந்த இரு கோல்களையும் சமன் செய்ய கிடைத்த இரண்டு வாய்ப்புகளை பெல்ஜியம் வீர்கள், லுகாகு, ஒரிஜி ஆகியோர் சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினர்.

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிய இத்தாலி கடும் விமர்சனங்களை சந்தித்திருந்தது. யூரோ கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் வலுவில்லாத அணி என நிபுணர்களால் விமர்சிக்கப்பட்ட நிலையில் இத்தாலி அணி தொடரை வெற்றியுடன் தொடங்கி அசத்தியுள்ளது. இத்தாலி தனது 2வது ஆட்டத்தில் வரும் 17-ம் தேதி ஸ்வீடனை சந்திக்கிறது. இதே நாளில் பெல்ஜியம், அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

சேம்சைடு கோல்

இ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அயர்லாந்து-சுவீடன் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் பாதியில் கோல் எதும் அடிக்கப்படாத நிலையில் 48-வது நிமிடத்தில் அயர்லாந்தின் ஹூலாஹன் முதல் கோலை அடித்தார். சுவீடன் வீரர்கள் எவ்வளவோ போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. 71-வது நிமிடத்தில் திடீர் திருப்பமாக சியரன் கிளார்க் சேம்சைடு கோல் அடிக்க அயர்லாந்து அணி அதிர்ச்சியில் உறைந்தது.

சுவீடன் வீரர் இப்ராமோகிவிக் கோல் கம்பத்தை நோக்கி அடித்த பந்தை கிளார்க் தலையால் முட்டி தடுக்க முயன்ற போது அது கோலாக மாறியது.

இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது. அதன் பின்னர் இரு அணிகளின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. சியரன் கிளார்க்கின் சேம்சைடு கோலால் 28 ஆண்டுகளுக்கு பிறகு யூரோ கால்பந்து தொடரில் வெற்றி பெறும் வாய்ப்பை கோட்டை விட்டது அயர்லாந்து அணி.

இன்றைய ஆட்டங்கள்

ரஷ்யா-சுலேவேக்கியா

நேரம்: மாலை 6.30

ருமேனியா-சுவிட்சர்லாந்து

நேரம்: இரவு 9.30

பிரான்ஸ்-அல்பேனியா

நேரம்: நள்ளிரவு 12.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x