Published : 16 Jul 2016 02:51 PM
Last Updated : 16 Jul 2016 02:51 PM

கோலி, ராகுல், ஜடேஜா அரைசதம்: இந்தியா 364 ரன்களுக்கு ஆட்டமிழந்த்து

செயிண்ட் கிட்ஸில் நடைபெறும் 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டியில், 2-ம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மே.இ.தீவுகள் வாரியத்தலைவர் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைக் காட்டிலும் இந்திய அணி 184 ரன்கள் முன்னிலை பெற்றது.

மேற்கிந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அணியில் கார்ன்வால் என்ற ஆஃப் ஸ்பின்னர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவர் புஜாரா, கோலி, ரஹானே, பின்னி, ஜடேஜா ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முரளி விஜய் 23 ரன்களுக்கும், ஷிகர் தவண் 9 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, புஜாரா 28 ரன்களுக்கு கார்ன்வால் பந்தில் பவுல்டு ஆனார், புஜாரா, ராகுல் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 59 ரன்கள் சேர்த்தனர்.

ராகுல், கோலி இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 88 ரன்களைச் சேர்த்தனர். 9 பவுண்டரி 1 சிக்சருடன் ராகுல் 64 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் அவுட் ஆனார்.

விராட் கோலி திருப்திகரமாக ஆடினார் என்று கூற முடியாவிட்டாலும் 94 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து கார்ன்வால் ஆஃப் ஸ்பின்னுக்கு எல்.பி.ஆனார். ரஹானே 32 ரன்களுக்கும், ஸ்டூவர்ட் பின்னி 16 ரன்களுக்கும் கார்ன்வாலிடம் வீழ்ந்தனர். விருத்திமான் சஹா 31 ரன்களுக்கு ரன் அவுட் ஆக இந்திய அணி 254/7 என்று ஆனது.

9-ம் நிலையில் இறங்கிய ஜடேஜா, தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி அதிரடி முறையில் விளையாடினார். இவர் 61 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்து, அஸ்வின் (26), சஹா ஆகியோருடன் கூட்டணி அமைக்க இந்திய அணி 364 ரன்கள் எடுக்க முடிந்தது.

ஆஃப் ஸ்பின்னர் கார்ன்வால் 118 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் வாரிய அணி 1 விக்கெட் இழப்புக்குக் 26 ரன்கள் எடுத்துள்ளனர். லியான் ஜான்சன் விக்கெட்டை தன் பந்து வீச்சில் தானே கேட்ச் பிடித்து வெளியேற்றினார் அஸ்வின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x