Published : 30 Apr 2017 03:02 PM
Last Updated : 30 Apr 2017 03:02 PM

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 7 வது வெற்றி: சூப்பர் ஓவரில் குஜராத்தை வென்றது

குஜராத் லயன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடந்தது. டாஸில் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். மலிங்கா - பும்ரா ஜோடியின் அசுரத்தனமான பந்துவீச்சு குஜராத்தின் வேகத் துக்கு ஆரம்பத்திலேயே முட்டுக் கட்டை போட்டது. மலிங்காவின் பந்துவீச்சில் மெக்கலம் (6 ரன்கள்), பின்ச் (0) ஆகியோர் ஆட்டம் இழக்க, ரெய்னாவின் (1 ரன்) விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். இதனால் ஆக்ரோஷமாக ஆட்டத்தை தொடங்கிய குஜராத் அணி அடங்கிப் போனது.

மும்பை அணியின் பந்துவீச்சுக்கு ஓரளவு சவால் விட்ட இஷான் கிஷனும் 48 ரன்களில் அவுட் ஆக, குஜராத் அணி மேலும் திணறியது. கடந்த சில ஆட்டங்களில் ஆடாமல் இருந்த குருனால் பாண்டியா தன் பங்குக்கு தினேஷ் கார்த்திக் (2 ரன்கள்), ஜடேஜா (28 ரன்கள்), இர்பான் பதான் (2 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்த மும்பை அணியின் தாக்குதல் தீவிரமடைந்தது.

ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் என்று திணறிக்கொண்டிருந்த குஜராத் அணியை மீட்கும் முயற்சியில் ஆண்ட்ரூ டை, ஜேம்ஸ் பாக்னர் ஆகியோர் ஈடுபட்டனர். 8-வது விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் சேர்ந்து 43 ரன்களைச் சேர்த்தனர். பாக்னர் 21 ரன்களையும், டை 25 ரன்களையும் குவித்து அவுட் ஆக குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணியில் குருனால் பாண்டியா அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

வெற்றிபெற 154 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த மும்பை அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஜாஸ் பட்லர் 9 ரன்களில் ரன் அவுட் ஆனபோதும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பார்த்தீவ் படேல் ஆவேசமாக ஆடி ரன்களைக் குவித்தார். இதனால் மும்பை அணி 4.4 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்தது.

குஜராத் பந்து வீச்சாளர்களுக்கு சவால் விடும் வகையில் பேட்டிங் செய்த பார்த்தீவ் படேல் 32 பந்துகளில் 1 சிக்சர் 6 பவுண்டரிகளுடன் அரை சதத்தைக் கடந்தார். மும்பை அணியின் ஸ்கோர் 82 ரன்களாக இருந்தபோது ராணாவின் (19 ரன்கள்) விக்கெட்டை அங்கித் சோனி கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா (5 ரன்கள்), பார்த்தீவ் படேல் (70 ரன்கள் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆக மும்பை அணிக்கு கலக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மும்பை அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிய ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் மும்பை அணி 10 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஆட்டம் டை ஆகி, சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 பந்துகளில் 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன்களைச் சேர்த்தது. பொலார்டு 10 ரன்கள் குவித்தார். இந்த ஓவரை பாக்னர் வீசினார். இதைத்தொடர்ந்து ஆடவந்த குஜராத் அணி வீரர்களான பின்ச், மெக்கலம் ஆகியோரால் பும்ரா வீசிய ஓவரில் 6 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதைத்தொடர்ந்து மும்பை அணி 7 வது வெற்றியை பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x