Last Updated : 22 Feb, 2017 03:34 PM

 

Published : 22 Feb 2017 03:34 PM
Last Updated : 22 Feb 2017 03:34 PM

எனது தலைமைத்துவம் பற்றி தீர்ப்பு கூற இது சரியான தருணமல்ல: விராட் கோலி

தனது தலைமைத்துவம் பற்றி தீர்ப்பளிக்க இது சரியான தருணமல்ல என்றும் கேப்டன் வாழ்க்கையில் தான் முதல்படியில் இருப்பதாகவே கருதுவதாகவும் விராட் கோலி தெரிவித்தார்.

நாளை புனேயில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி கூறியதாவது:

ஒவ்வொரு தொடருக்குப் பிறகும் நான் என்னை மதிப்பீடு செய்ய மாட்டேன், போட்டிகளை வெல்வதே முதல் குறிக்கோள். அணி எவ்வாறு ஆடுகிறதோ அதன்படிதான் கேப்டன் திறமையும் கணிக்கப்படும், வீரர்களாக நாங்கள் எஙக்ள் திறமைக்கேற்ப ஆடவில்லையெனில் கேப்டனாக நான் அதிகம் எதுவும் செய்து விட முடியாது.

அணி எவ்வளவு முதிர்ச்சி அடைகிறதோ அவ்வளவு அந்த அணியின் கேப்டனும் சிறந்தவராகத் தெரிவார். அணி சரியாக ஆடாத போது கேப்டன்சி என்பது கட்டுப்பாட்டை இழக்கும்.

எனவே 5-8 ஆண்டுகள் செல்ல வேண்டும், நான் எனது கேப்டன்சியைப் பற்றி மதிப்பீடு செய்ய, அதாவது இத்தனை ஆண்டுகள் நான் கேப்டனாக நீடிக்க முடிந்தால். எனவே என்னைப்பொறுத்தவரை நான் கேப்டனாக என்ன செய்தேன் அல்லது என்ன செய்யவில்லை என்பதை மதிப்பிட இது மிகவும் முதற்கட்டமாகும்.

கேப்டன்சி நம்மை மெத்தனமாக இருக்க அனுமதிக்காது, குறிப்பாக பேட்டிங்கில். இந்த விதத்தில் கேப்டனாக என்னிடமிருந்து மெத்தனம் வெளியேறிவிட்டது.

சில சூழ்நிலைகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம், கூடுதல் பொறுப்பில்லாவிட்டால் நாம் அதைச் செய்யாமல் கூட போய் விடலாம், ஒரு தளர்வான ஷாட்டில் ஆட்டமிழக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் கேப்டன்சி மெத்தனத்தை என்னிடமிருந்து எடுத்து விட்டதால் கூடுதல் பொறுப்பு காரணமாக கூடுதல் கவனம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஒரு விஷயம்தான் எனக்கும் சரி ஸ்மித்துக்கும் சரி கைகொடுத்து வருகிறது என்று நினைக்கிறேன், ஸ்டீவ் பேட்டிங்கில் சீராக ரன்களை குவித்து வருகிறார். கேப்டனாகவும் அவர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இங்கு போல்தான் அங்கும் கேப்டன் பொறுப்பு அவரிடம் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது ஆட்டத்தில் வெளிப்படுகிறது. அவர் நம்பர் 1 டெஸ்ட் வீரர், இதற்கு காரணம் இருக்கிறது. எனக்கும் அவருக்குமான ஒற்றுமைகளை நான் குறிப்பிட முடியவில்லை அகாதெமியில் அவரைப் பார்த்த போது அவர் ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மெனாக இல்லை, லெக்ஸ்பின்னராக கரியரைத் தொடங்கி பெரிய பேட்ஸ்மெனாக அவர் மாறியிருப்பது ஒரு அபாரமான சாதனையாகும்.

என்னுடைய ஆட்டம் எந்த நிலையில் உள்ளது என்பதில் நான் தன்னம்பிக்கையுடன் உள்ளேன். சிலர் கருத்துகளை எழுதுகின்றனர், அது அவர்கள் வேலை, அதனை நான் கட்டுப்படுத்த முடியாது. நான் என் ஆட்டத்தில் கவனமாக இருக்கிறேன், அதுதான் எனக்கு இப்போது முதல் கவனம்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x