Published : 01 Jun 2016 09:43 AM
Last Updated : 01 Jun 2016 09:43 AM

அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிக்கும் கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க இதுவே சரியான நேரம்: ரவி சாஸ்திரி கருத்து

அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கும் இந்திய அணியை வழிநடத்த விராட் கோலி தயாராகி விட்டார். கேப்டன் பொறுப்பை கோலியிடம் வழங்குவதற்கு இதுவே சரியான நேரம் என்று அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக உள்ளார். தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் குறுகிய வடிவிலான போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக செயல் பட்டு வருகிறார். வரும் மாதங்க ளில் இந்திய அணி ஒருநாள் போட்டிகளை விட அதிக அளவி லான டெஸ்ட் தொடர்களிலேயே விளையாட உள்ளது.

விராட் கோலி தலைமையில் 17 டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி அடுத்தடுத்து எதிர்கொள்ள உள்ளது. இதில் 13 ஆட்டங்களை சொந்த மண்ணிலேயே இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியதாவது:

அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கும் இந்திய அணியை வழிநடத்த விராட் கோலி தயாராகி விட்டார். நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் இது போன்றுதான் சிந்திப்பேன். 50 ஓவர் உலகக் கோப்பைக்கு இன்னும் 3 வருடங்கள் உள்ளன.

இந்த இடைப்பட்ட காலத்தில் பெரிய அளவிலான எந்தவித போட்டி தொடர்களும் இல்லை. அணியை கட்டமைப்பதற்கும், சிந்திப்பதற்கும் இதுதான் சிறந்த நேரம். இந்திய அணி 18 மாதங்கள் இடைவெளிக்கு பின்னர்தான் ஒருநாள் போட்டி தொடரை எதிர்கொள்ள உள்ளது.

டெஸ்ட் தொடர்களுக்கும், ஒருநாள் போட்டிக்குமான கால இடைவெளி மிக அதிகம். எனவே அடுத்த 3 ஆண்டுகளை கணக்கில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது கடுமையான முடிவு தான். ஆனால் இதுகுறித்து இப்போது சிந்திக்கத்தான் வேண்டும். இந்திய கிரிக்கெட்டுக்காக கடினமான முடிவை மேற்கொண்டுதான் ஆக வேண்டும். இதில் எந்தவித தவறும் இல்லை. இந்திய கிரிக்கெட்டில் இது விருப்பமாகவே உள்ளது.

தோனி சிறந்த கேப்டன். அவர் அந்த அந்த பொறுப்பில் தொடர வேண்டும் என நினைக்கலாம். ஆனால் இங்கு பிரச்சினை இந்திய அணி நீண்ட நாட்கள் கழித்தே ஒருநாள் தொடரை எதிர்கொள்கிறது என்பது தான். இந்த இடைவெளியானது தோனிக்கு மிகவும் கடினமாக இருக்கும். தோனிக்கு பதிலாக வேறு ஒரு வீரர் உள்ளாரா என்று கேட்டால் எனது பதில் நாம்தான் உருவாக்க வேண்டும் என்பதாகவே இருக்கும்.

தோனி வீரராக மட்டும் இடம் பெற்று பங்களிப்பை வழங்கலாம். கேப்டன் பொறுப்பு இல்லாத பட்சத்தில் அவர் சுதந்திரமாக விளையாட முடியும். அவர் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுவதற்கான நேரம் வந்து விட்டதாகவே நினைக்கிறேன்.இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

ரவி சாஸ்திரி கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்திய அணியின் இயக்குநராக செயல்பட்டார். அவர் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அதாவது டிசம்பரில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். இதையடுத்து 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் விராட் கோலி டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x