Published : 17 Feb 2014 12:12 PM
Last Updated : 17 Feb 2014 12:12 PM

சிந்துவின் அடுத்த இலக்கு - காமன்வெல்த்

2013-ம் ஆண்டு சீசனை சிறப்பாக முடித்த இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து அடுத்ததாக காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வதையும் சர்வதேச தரவரிசையில் முதல் 6 இடங்களுக்குள் முன்னேறுவதையும் இலக்காகக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம், மலேசிய ஓபன் மற்றும் மக்காவ் ஓபன் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றது உள்பட கணிசமான பதக்கங்களைக் குவித்தார்.

இந்த சீசனில் சயீத் மோடி தேசிய பாட்மிண்டன் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியதோடு, அகில இந்திய சீனியர் ரேங்கிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சிந்து, ஆல் இங்கிலாந்து போட்டிக்காக தீவிரப் பயிற்சியில் இருக்கிறார். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:

இந்த ஆண்டு அடுத்தடுத்து ஏராளமான போட்டிகள் இருக்கின்றன. இந்த மாதம் (பிப்ரவரி) முழுவதும் எவ்வித போட்டியும் இல்லாததால் எனது ஆட்டத்திறனை மேம்படுத்த முயற்சி எடுத்தேன். ஆல் இங்கிலாந்து போட்டிக்காக சிறப்பாகத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுப்பேன். அந்தப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளேன்” என்றார்.

அடுத்து விளையாடவுள்ள போட்டிகள் குறித்துப் பேசிய சிந்து, “இந்த சீசனை சிறப்பாகத் தொடங்கியிருக்கிறேன். அடுத்து வரக்கூடிய போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவேன் என நம்புகிறேன். அடுத்த மாதம் ஆல் இங்கிலாந்து மற்றும் ஸ்விஸ் ஓபன் போட்டிகளில் விளையாடுகிறேன். அதைத் தொடர்ந்து சூப்பர் சீரிஸ் போட்டிகள் மற்றும் காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

எனினும் எந்தெந்த போட்டிகளில் நான் பங்கேற்பது என்பதை பயிற்சியாளர் கோபிசந்த்தான் முடிவு செய்வார். முதல்முறையாக காமன்வெல்த் போட்டியில் விளையாடவிருப்பதால் நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். இந்த முறை காமன்வெல்த் போட்டியில் நாம் அதிக பதக்கங்களைக் குவிக்க முடியும் என நம்புகிறேன்” என்றார்.

தரவரிசைப் பற்றி பேசிய சிந்து, “நிறைய போட்டிகளில் வெல்ல விரும்புகிறேன். தொடர்ந்து பதக்கங்களைக் குவிக்கும்போது தரவரிசையிலும் முன்னேற்றம் ஏற்படும். இந்த ஆண்டின் இறுதிக்குள் தரவரிசையில் 6 அல்லது 7-வது இடத்துக்குள் வர விரும்புகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x