Last Updated : 17 Aug, 2016 09:13 AM

 

Published : 17 Aug 2016 09:13 AM
Last Updated : 17 Aug 2016 09:13 AM

100 மீட்டர் ஓட்ட அட்டவணை முட்டாள்தனமாக அமைப்பு: உசேன் போல்ட் ஆதங்கம்

ரியோவில் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட் 9.81 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

ஏற்கெனவே 100 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை 9.58 வினா டிகள் கடந்து சாதனைப் படைத் துள்ளார் போல்ட். இதுதான் உலக சாதனையாக உள்ளது. பிரேசில் ஒலிம்பிக்கில் இதைவிட குறைந்த விநாடிகளில் இலக்கை அடைய போல்ட் திட்டமிட்டிருந்தார். ஆனால் போட்டியின் அட்டவணை அதற்கு தகுந்த வகையில் அமைக் கப்படவில்லை என்று போல்ட் தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.

அரை இறுதி போட்டி முடிவடைந்த ஒரு மணி நேரத்துக்குள் இறுதிப் போட்டி தொடங்கப்பட்டு விட்டது. இதனால் சரியான வேகத்தில் தன்னால் ஓட முடியவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் போல்ட். அரை இறுதியில் 9.86 விநாடிகளில் இலக்கை கடந்த அவர், இறுதிப் போட்டியில் 9.81 விநாடிகள் எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்து உசேன் போல்ட் கூறும்போது “100 மீட்டர் போட்டி அட்டவணையை யார் முடிவு செய்தது என்று எனக்கு தெரியவில்லை. இது உண்மையிலேயே முட்டாள் தனம். இதனால்தான் ஓட்டம் மெதுவாக இருந்தது. ஒரு போட்டியில் ஓடி முடித்துவிட்டு உடனடியாக அடுத்த போட்டிக்கு தயார் ஆனதால் மீண்டும் வேகமாக ஓட வழியில்லாமல் போனது.

ஓட்ட பந்தய வீரர்களை விட போட்டி ஒளிபரப்பாளர்களை மனதில் வைத்தே அட்டவணையை தயார் செய்துள்ளனர். கடந்த காலங்களில் அரை இறுதிக்கும், இறுதி போட்டிக்கும் இடையில் சுமார் 2 மணி நேரங்கள் இடைவெளி கொடுக்கப்பட்டது.

பயிற்சி எடுத்துக் கொள்ளும் இடத்திலேயே நான் முதன்முறையாக ஜாக்கிங் செய்து இறுதிப் போட்டிக்கு தயார் ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது’’என்றார்.

இறுதிப் போட்டியில் சுமார் 50 மீட்டர் வரை அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின்தான் முன்னிலையில் இருந்தார். உசேன் போல்ட் பின்தங்கியே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் சிறப்பாக செயல்பட்டு 3-வது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் போல்ட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x