Last Updated : 01 Jun, 2016 09:37 AM

 

Published : 01 Jun 2016 09:37 AM
Last Updated : 01 Jun 2016 09:37 AM

மெஸ்ஸி காயத்தால் அர்ஜென்டினா கவலை

தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கிடையேயான கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் வரும் 3-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான சிலி, 14 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

போட்டி தொடங்க இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியின் காயத்தால் அர் ஜென்டினா அணி நிர்வாகம் மிகுந்த கவலையடைந்துள்ளது. முதல் முறையாக மெஸ்ஸி இந்த தொடரில் கேப்டனாக செயல்பட இருந்தார்.

கடந்த இருதினங்களுக்கு முன்பு நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்ற மெஸ்ஸி எதிரணி வீரர் மீது மோதியதில் காயம் அடைந்தார். விலா எலும்பு பகுதியில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. அர்ஜென்டினா அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 6-ம் தேதி சில அணியை எதிர்கொள்கிறது.

கடந்த முறை இறுதிப் போட்டியில் சிலி அணியிடம் தான் அர்ஜென்டினா தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந் திருந்தது. இதற்கு பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணி திட்டமிட்ட நிலையில் மெஸ்ஸியின் காயம் அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

எனினும் முதல் போட்டிக்கு முன்னதாக மெஸ்ஸி முழு உடல் தகுதியை அடைந்து விடுவார் என அணியின் மருத்துவக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

2014 உலகக் கோப்பை மற்றும் 2015 கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் மெஸ்ஸி அபாரமாக விளையாடி தொடர் நாயகன் விருதுகளை வென்றிருந்தார். அர்ஜென்டினா அணி கடைசியாக கடந்த 1993-ம் ஆண்டு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை வென்றிருந்தது. அதன் பின்னர் இதுவரை பெரிய அளவிலான தொடர்களில் சாதிக்க வில்லை.

23 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வெல்லும் கனவுடன் உள்ள அர்ஜென்டினா அணி மெஸ்ஸியின் உடல் தகுதியால் நிலைகுலைந்துள்ளது. கிளப் போட்டிகளில் மட்டுமே கோல்கள் அடிக்கும் மெஸ்ஸி, சர்தேச போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக இதுவரை சாதித்ததில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் உள்ளது.

எனினும் கடந்த 2014 உலகக் கோப்பை கால்பந்து மற்றும் 2015 கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸி முக்கிய பங்கு வகித்தார்.

சர்வதேச தொடர்களில் முக்கியமான ஆட்டத்தில், தான் கோல்கள் அடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து மெஸ்ஸி கூறும்போது, "இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம் என்று எதையும் சிந்திக்காமல் கூறுபவர்களை கண்டால் எனக்கு கோபம் வரும். நாட்டின் உடையை அவர்கள் உணரவில்லை.

உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிகளில் இடம் பெற்ற அதிர்ஷ்டசாலிகளாக நாங்கள் இருந்தோம். ஆனால் நாங்கள் எதையும் செய்யாதது போல் தெரிகிறது.

இரு இறுதிப்போட்டிகளை பெற்ற போதிலும், நாங்கள் வெற்றி பெறவில்லை. நீங்கள் என்ன செய்ய முடியும். இறுதிப்போட்டியில் தோல்வியடைவது என்பது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைவது போன்றது இல்லை.

எப்போதும் நான் தேசிய அணிக்காக விளையாடுவ தற்கே முன்னுரிமை அளிக்கி றேன். நான் வெற்றி பெற வேண்டும். கோபா அமெரிக்கா தொடரை வென்றால் சிறப் பானதாக இருக்கும்" என்றார்.

தற்போது 28 வயதாகும் மெஸ்ஸி மீண் டும் ஒரு முறை கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் விளையாடக்கூடும். ரஷ்யாவில் 2018-ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் போது மெஸ்ஸி 31 வயதை கடந்தவராக இருப்பார்.

எனவே தற்போதைய 'கோல்டன்' பார்மை மெஸ்ஸி சரியாக பயன்படுத்த காத்திருக்கும் நிலையில் விலா எலும்பில் ஏற்பட்டுள்ள காயம் இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் அர்ஜென்டினா அணியில் உள்ள முன்னணி வீரர்க ளான ஜாவியர் மஸ்க ரனோ, லாவேஸ்ஸி, கோன்ஸாலோ, ஏஞ்சல் டி மரியா, செர்ஜியோ அகுரா ஆகியோரும் 2018 உலகக் கோப்பை தொடரின் போது 30 வயதை கடக்கின்றனர்.

2015 கோபா அமெரிக்கா போட்டியின் போது, இந்த தலைமுறையில் நாம் கோப்பை வெல்லாவிட்டால் அதற்காக வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவோம் என கூறியிருந்தார்.

ஆனால் தற்போது மெஸ்ஸி கூறும்போது, "அர்ஜென்டினா அணி பட்டம் வென்று நீண்ட காலம் ஆகிறது. இதே அணி தான் கடந்த உலகக் கோப்பை மற்றும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்களில் இறுதிப்போட்டி வரை சென்றது. இம்முறை நாங்கள் பட்டம் வெல்ல தகுதியானவர்கள் தான்" என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x