Last Updated : 22 Jul, 2016 03:03 PM

 

Published : 22 Jul 2016 03:03 PM
Last Updated : 22 Jul 2016 03:03 PM

ஊக்கமருந்தில் சிக்கிய ரஷ்ய தடகள வீரர்களுக்குத் தடை: இருண்டு போன 67 வீரர்களின் ஒலிம்பிக் கனவு

ரஷிய தடகள வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசும், தடகள சங்கமும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரஷிய தடகள அணி, ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச தடகள கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.

அதை எதிர்த்து ஸ்விட்சர்லாந்தின் லாசனில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் ரஷியா மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த விளையாட்டு தீர்ப்பாயம், ரஷ்யர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டது.

மேலும் சர்வதேச தடகள கூட்டமைப்பின் விதிமுறைப்படி, அந்த கூட்டமைப்பினால் இடை நீக்கம் செய்யப்பட்டவர்கள், ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதியில்லாதவர்கள் என்பது சரியான முடிவுதான் என்றும் தெரிவித்துள்ளது.

இது ரஷ்ய தடகள வீரர்களின் ஒலிம்பிக் கனவுகளை இருளடையச் செய்துள்ளது. 2 முறை ஒலிம்பிக் சாம்பியனான போல் வால்ட் மேதை இசின்பயேவா. 110 மீ தடை ஓட்ட உலக சாம்பியன் செர்ஜி ஷுபென்கோவ் ஆகியோரின் ஒலிம்பிக் சாதனைகளை நாம் இந்த ஒலிம்பிக்கில் காண வாய்ப்பில்லை.

சர்வதேச தடகள கூட்டமைப்பு விதித்த தடையை எதிர்த்து மொத்தம் 68 ரஷ்ய வீரர்கள் மேல்முறையீடு செய்தனர், இதில் நீளம் தாண்டுதல் வீரர் தார்யா கிளிஷீனாவுக்கு மட்டும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஊக்கமருந்து விவகாரத்தை அம்பலப்படுத்திய 800மீ தடகள வீரர் யூலியா ஸ்டெபனோவா பங்கேற்க முடியுமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்து சர்வதேச தடகள கூட்டமைப்பு தலைவர் செபாஸ்டியன் கோ கூறும்போது, “வெற்றி முழக்க அறிக்கைகளுக்கான நாள் அல்ல இது. தடகள வீர்ர்களை போட்டியில் கலந்து கொள்ள விடாமல் செய்ய நான் வரவில்லை. எங்கள் கூட்டமைப்பின் இயல்பூக்க ஆசை என்னவெனில் அனைவரையும் உள்ளடக்குவதே தவிர வெளியேற்றுவதல்ல.

ரஷ்யாவுடன் தொடர்ந்து பணியாற்றி ஊக்கமருந்து எனும் அரக்கனை வெளியேற்றி மீண்டும் ரஷ்ய வீரர்கள் தடகள போட்டிகளில் பங்கேற்கச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா தடகளத்தில் 2-வது பெரிய நாடாக இருந்தது. 7 தங்கப்பதக்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என்று தடகளத்தில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருந்தது ரஷ்யா. 17 பதக்கங்களை ரஷ்யா வென்றது, ஆனால் இதில் சில பதக்கங்கள் ஊக்க மருந்து விவகாரத்தினால் செல்லுபடியாகாமல் போயுள்ளது.

3000 மீட்டர் ஓட்ட தங்க வீராங்கனை யூலியா ஸாரபோவா அனபாலிக் ஸ்டெராய்ட் எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளதால் அவரது தங்கப்பதக்கமும் கூட பறிக்கப்படும்.

இந்தச் சிக்கல்களினால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 2012 ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுகளை உறுதி செய்யாமல் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x