Published : 07 Apr 2017 05:23 PM
Last Updated : 07 Apr 2017 05:23 PM

முதலில் கோலியின் கேப்டன்சி திறமைகளைச் சந்தேகித்தேன், நான் தவறு என்று நிரூபித்தார்: டிவில்லியர்ஸ் புகழாரம்

கேப்டனாக இருப்பதற்கு சரியான பொறுமையும் நிதானமும் உடையவர்தானா கோலி என்று தான் முதலில் சந்தேகித்ததாகவும் ஆனால் தான் தவறு என்பதைக் கோலி நிரூபித்ததாகவும் தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

“முதலில் கோலியிடம் தலைமைத்துவத்திற்கான குணங்கள் இருப்பதாக பலரும் கூறியபோது நான் சந்தேகித்தேன். அவர் தனது எதிர்வினைகளில் மிகவும் உணர்ச்சிவசப்படுபவராக இருக்கிறார் என்று நான் கருதினேன்.

ஆனால் அதனை கையாளும் வழிமுறையை அவர் கண்டு கொண்டார் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னமும் கூட அவர் உணர்ச்சிகரமானவர்தான். வெற்றி பெறுவதுதான் அவரது குறிக்கோள், அதில் அவர் மிகவும் உணர்வுமிக்கவர். ஆனாலும் கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டு விட்டார் என்றே நான் நினைக்கிறேன்.

இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் மிகப்பெரிய சொத்து அபாரமாக கேப்டன்சி செய்து வருகிறார்.

கேப்டன்சியில் தனது திறமைகளை நிரூபித்துள்ளார். அவர் மீது சந்தேகப்பட்டவர்கள் அனைவருக்கும் தன்னால் அனைத்தையும் வெற்றி கொள்ள முடியும் என்று காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் பேட்டிங்கில் சரியாக சோபிக்கவில்லை ஆனாலும் தலைமைத்துவத்தில் தனித்துவமாக மிளிர்ந்தார்.

ஒரு கேப்டனுக்கு தான் பேட்டிங்கில் சரியாக ஆடாத போது கேப்டன்சியில் வெற்றி சாதிப்பது கடினம், ஆனால் இதையும் அவர் ஆட்கொண்டு விட்டார். அவர் உண்மையான ஒரு தலைவராக உருவாகியுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் அவர் எப்படி மேலும் வளர்ச்சியுறுகிறார் என்பதைக் காண ஆர்வமாக இருக்கிறேன்.

நான் என்னை சிறந்த வீரராகக் கருதவில்லை. நான் அனைத்து வடிவங்களிலும் ஆடுவதில்லை. கோலிதான் இந்த வகையில் உலகின் தலை சிறந்த வீரராக திகழ்கிறார். அவருக்கு ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் தற்போது டி காக் ஆகியோர் போட்டியில் உள்ளனர். என்னைப்போன்றவர்தான் கோலியும் என்று நான் நினைக்கிறேன் ஆட்டத்தை உணர்வுபூர்வமாக, நல்ல உத்திகளையும் திறமைகளையும் பயன்படுத்துவது என்று அவரும் ஆடிவருகிறார். எனக்கும் தோல்வி பிடிக்காது. மிகவும் போட்டி மனப்பான்மையுடன் கூடிய உக்கிரமான ஒரு வீரரை நான் கோலியிடத்தில் காண்கிறேன், இப்படிப்பட்ட ஒரு உக்கிரத்தை நான் வேறு ஒருவரிடமும் கண்டதில்லை. அவர் ஆடுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிரியத்திற்குரியது” என்றார் டிவில்லியர்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x