Published : 22 Jul 2016 09:42 AM
Last Updated : 22 Jul 2016 09:42 AM

1936 பெர்லின் ஒலிம்பிக்: மரணத்தை வென்ற பெட்டி ராபின்சன்

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் 11-வது ஒலிம்பிக் போட்டி 1936-ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 16 வரை நடைபெற்றது. 49 நாடுகளைச் சேர்ந்த 3,632 வீரர்கள், 331 வீராங்கனைகள் என மொத்தம் 3,963 பேர் கலந்து கொண்டனர்.

இந்த ஒலிம்பிக் போட்டிதான் முதல்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. வழக்கமாக முதலிடம் பிடிக்கும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி போட்டியை நடத்திய நாடான ஜெர்மனி 33 தங்கம், 26 வெள்ளி, 30 வெண்கலம் என 89 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்கா 24 தங்கம், 20 வெள்ளி, 12 வெண்கலம் என 56 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. ஹங்கேரி 10 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்தது.

டூனியை பாராட்டிய ஹிட்லர்

எகிப்தைச் சேர்ந்த 20 வயது பளுதூக்குதல் வீரரான காதர் சையது எல் டூனி, ஜெர்மனியைச் சேர்ந்த உலக சாம்பியன்களான ரூடால்ப், அடால்ப் ஆகியோரை வீழ்த்தியதோடு புதிய ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளை படைத்தார்.

டூனியின் அபார திறமையைக் கண்டு வியந்த ஜெர்மனி அதிபர் ஹிட்லர், பதக்க மேடைக்கு சென்று அவரைப் பாராட்டினார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக எங்கள் வீரர்கள் எதிரணியினரை புரட்டியெடுப்பார்கள் என ஹிட்லர் சவால் விடுத்திருந்தார்.

ஆனால் போட்டி முடிந்த பிறகு டூனிக்கு தங்கப் பதக்கத்தை வழங்கிய ஹிட்லர், "உங்க ளால் எகிப்து பெருமையடைகிறது. நீங்கள் ஜெர்மனியைச் சேர்ந்தவராக இருந்திருந் தால் உங்களை தூக்கி வைத்து கொண்டாடி யிருப்பேன். எனினும் நீங்கள் ஜெர்மனியை உங்களின் இரண்டாவது தாய் நாடாக கருதுவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

இந்தியா ஹாட்ரிக்

ஹாக்கி போட்டியில் இந்தியா 3-வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தது. இறுதி போட்டியில் 8-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை பந்தாடியது. இந்த ஆட்டத்தில் தயான் சந்த் 3 கோல்களை அடித்தார்.

தயான் சந்தின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த ஜெர்மனி அதிபர் ஹிட்லர் தனது நாட்டு குடியுரிமை தருவதாகவும், ஜெர்மனி ராணுவத்தில் உயர் பதவி வழங்குவதாகவும் உறுதி கொடுத்தார். ஆனால் தயான் சந்த் அதற்கு சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டார்.

மரணத்தை வென்ற பெட்டி ராபின்சன்

மகளிர் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜெர்மனி அணியினர் தங்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெர்மனி வீராங்கனைகள் ‘பேட்டனை' தவறவிட்டதால் அந்த அணி தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இதனால் அமெரிக்காவுக்கு தங்கம் கிடைத்தது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த பெட்டி ராபின்சன், 1931-ல் நடைபெற்ற விமான விபத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரை பிணவறைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறக்கவில்லை என்பதும், கோமாவில் இருப்பதும் தெரியவந்தது.

தீவிர சிகிச்சையால் அடுத்த 6 மாதத்தில் கோமாவில் இருந்து மீண்டார் ராபின்சன். ஆனால் அவர் நடப்பதற்கு மேலும் 2 ஆண்டுகள் ஆனது. இதன் காரணமாக அவரால் 1932 ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனது. எனினும் மனம் தளராத ராபின்சன், பெர்லின் ஒலிம்பிக்கில் மகளிர் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று தங்கம் வென்றார். மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்து தங்கம் வென்ற ராபின்சன் அமெரிக்க தடகளத்தில் சரித்திர புகழை பெற்றவராக திகழ்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x