Last Updated : 09 Sep, 2018 03:49 PM

 

Published : 09 Sep 2018 03:49 PM
Last Updated : 09 Sep 2018 03:49 PM

இங்கி. கீழ்வரிசை வீரர்களை விரைவில் வீழ்த்த முடியாததற்கு பணிச்சுமையும் காரணம்: பும்ரா கருத்து

இங்கிலாந்து கீழ்வரிசை வீரர்களை வீழ்த்துவதற்குத் தொடர்ந்து இந்திய பவுலர்கள் திணறிவருவது குறித்து ஜஸ்ப்ரித் பும்ரா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதாவது டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை வீழ்த்த முற்று முழுதாக முயற்சி எடுத்து வீசுவதால் கீழ்வரிசை வீரர்கள் இறங்கும்போது பவுலர்கள் களைப்படைந்து விடுகின்றனர், இன்னொரு கூடுதல் பவுலர் இருந்தால் சவுகரியமாக இருக்கும் என்று பும்ரா அபிப்ராயப்படுகிறார்.

இந்தப் போட்டியில் பாண்டியாவை உட்கார வைத்துவிட்டு ஹனுமா விஹாரி என்ற புதிய பேட்ஸ்மெனை அணியில் சேர்த்துள்ளனர். 181/7லிருந்து இங்கிலாந்து பட்லர், பிராட் சதக்கூட்டணியில் 332 ரன்கள் குவித்து பிறகு இந்திய அணியை 174/6 என்று மடித்ததால் இந்திய அணி பெரிய முன்னிலையை இங்கிலாந்துக்குக் கொடுக்கும் என்று தெரிகிறது

இந்நிலையில் பும்ரா கூறியதாவது:

அணித்தேர்வு பற்றி நான் கூற முடியாது, அது அணி நிர்வாகம் தொடர்புடையது, ஆனால் கூடுதல் பவுலர் இருந்திருந்தால் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். 4 பவுலர்கள் என்றால் அதிக ஓவர்களை வீச வேண்டியுள்ளது. அதாவது உடனே உடனே பந்து வீச வரவேண்டியிருப்பதால் களைப்பு ஏற்படுகிறது.

இதுதானே தவிர, மற்றபடி நாங்கள் கடுமையாக உழைத்து வீசுகிறோம். கூடுதல் பவுலர் இருந்தால் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்.

190/7 என்று நல்ல நிலையில் இருந்தோம் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை, அவர்களும் நன்றாக ஆடினர். அவர்களை விரைவில் வீழ்த்துமளவுக்கு நன்றாக வீசவில்லை.

கீழ்வரிசை வீரர்களுக்கென்று பிரத்யேக திட்டமிடுதல் எதுவும் இல்லை. ஒவ்வொரு பேட்ஸ்மெனுக்குமே திட்டமிடுவோம், கீழ்வரிசை என்றாலும் நாங்கள் அவர்களை மதித்தே செயல்படுகிறோம். திட்டத்தைச் செயல்படுத்தினோம் ஆனால் அது பயனளிக்கவில்லை.

பட்லர் நமக்கு எதிராக ரன்கள் எடுக்கிரார் என்பதற்காக அவருக்கு வீசுவது கடினமாக உள்ளது என்றும் கூறுவதற்கில்லை. அதே போல் ஒரு பவுலிங் யூனிட்டாக அவரை விரைவில் வீழ்த்திவிட்டாலும் எளிதாக இருந்தது என்றும் நாங்கள் கூறுவதற்கில்லை.

டெய்ல் எண்டர்களுடன் பேட் செய்யும் போது அடித்து ஆடப்பார்ப்பார்கள், ஏனெனில் இழப்பதற்கு ஒன்றுமில்லை, அவுட் ஆனால் கூட யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். முதல் டெஸ்ட்டில் விராட் கோலி ஆடவில்லையா? சுழற்றிப் பார்க்க வேண்டும், வந்தால் போனஸ், வராவிட்டல் போனால் போகிறது.

இவ்வாறு கூறினார் பும்ரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x