Published : 02 Jun 2019 12:41 PM
Last Updated : 02 Jun 2019 12:41 PM

விராட் கோலிக்கு காயம்: தெ. ஆப்பிரிக்க போட்டியில் களமிறங்குவாரா?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பயிற்சியின் போது கையில் காயம் ஏற்பட்டு, பாதியிலேயே வெளியேறியுள்ளார். இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

12-வது உலகக்கோப்பைப் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகின்றன. இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் டூப்பிளசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவுடன் வரும் 5-ம் தேதி விளையாட உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி தனது முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்துள்ளதால், இந்தியாவுடன் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடும். அதேசமயம், இந்திய அணிக்கும் இது முதலாவது போட்டி, வெற்றியுடன் தொடங்க இந்திய வீரர்களும் தீவிரம் காட்டுவார்கள். இதனால் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்காக இந்திய அணியின் தீவிர பயிற்சியில் சவுத்தாம்டன் நகரில் உள்ள ஏஜெஸ் பவுல் பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வீரர்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கேப்டன் விராட் கோலியின் வலது பெருவிரலில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக கையில் அணிந்திருந்த கிளவுஸை அகற்றிப் பார்த்தபோது அது சிறிய அளவில் காயமாகத்தான் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதன்பின் விராட் கோலிக்கு அணியின் மருத்துவர் வந்து முதலுதவி சிகிச்சை அளித்து, கையில் வலிநிவாரணிஸ்ப்ரே அடிக்கப்பட்டது. ஆனால், சில பந்துகள் மட்டுமே பேட்டிங் செய்த கோலி, வலிதாங்க முடியாமல் அவதிப்பட்டார். உடனடியாக பேட்டிங் செய்வதை நிறுத்திவிட்டு வெளியேறினார்.

அதன்பின் ஐஸ்கட்டிகள் போடப்பட்ட  நீரில் கையை நனைத்துக்கொண்டவாறே நீண்டநேரம் கோலி அமர்ந்திருந்தார். ஆனால் கை பெருவிரலில் வீக்கமும், வலியும் குறையவில்லை. விராட் கோலிக்கு ஏற்பட்ட காயம் குறித்து இன்னும் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.

இதனால், பெருவிரலில் ஏற்பட்ட காயம் எத்தகையது, அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது குறித்துஅணி நிர்வாகம் இதுவரை ஏதும் கூறவில்லை. இதனால் விராட் கோலியின் நிலை சந்தேகத்துக்குரியதாகி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x