Published : 01 Mar 2018 08:37 AM
Last Updated : 01 Mar 2018 08:37 AM

2019-ம் ஆண்டுக்கு பிறகே ஓய்வு குறித்து முடிவு: மனம் திறக்கும் யுவராஜ் சிங்

2019-ம் ஆண்டு வரை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பேன் என்றும் அதன் பின்னரே ஓய்வு குறித்து முடிவு செய்வேன் என இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

36 வயதான யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணிக்காக கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர், சிறந்த திறனை வெளிப்படுத்தாததை தொடர்ந்து மீண்டும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு திரும்புவதற்காக கடும் பயிற்சிகள் மேற்கொண்டு வரும் யுவராஜ் சிங், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் ஐபிஎல் டி 20 தொடரை பெரிதும் நம்பி உள்ளார். இந்நிலையில் மொனாக்கோவில் நடைபெற்ற லாரஸ் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற யுவராஜ் சிங் கூறியதாவது:

ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்தத் தொடர் எனக்கு மிகவும் முக்கியமானதாகும். 2019-ம் ஆண்டு வரை கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அதன் பிறகே ஓய்வு குறித்து முடிவு செய்வேன். தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது. டெஸ்ட் தொடரை இழந்த பிறகு இந்திய வீரர்களிடம் இருந்து சிறந்த குணம் வெளிப்பட்டது. கடினமாக போராடிய டெஸ்ட் தொடராக இருந்தது.

எந்த பக்கமும் முடிவு அமையலாம் என்ற நிலையே காணப்பட்டது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் உறுதியான வெற்றி கிடைத்தது. கேப்டனாக விராட் கோலி முன்னின்று அதிக ரன்கள் குவித்து சிறப்பாக வழிநடத்தினார். சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். டி 20 தொடரையும் சிறப்பான முறையில் விளையாடி வென்றுள்ளனர். வெளிநாடு சென்று 3 தொடர்களில் இரண்டை வென்றுள்ளது இந்திய அணியின் ஆதிக்கத்தையே காட்டுகிறது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்த முடியும் என நம்பிக்கை கொள்வதற்கு இது நல்ல தொடக்கமாகும். இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x