Last Updated : 24 Mar, 2018 12:43 PM

 

Published : 24 Mar 2018 12:43 PM
Last Updated : 24 Mar 2018 12:43 PM

கவுண்டி அணியில் விளையாடும் விராட் கோலி: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிரட்ட, மெருகேற்றுகிறார்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், கவுண்டி அணியில் பங்கேற்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்துக்கு வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி பயணம் மேற்கொள்கிறது. 2 மாத பயணமாக அங்கு செல்லும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

அங்குள்ள காலநிலை ஆடுகளத்தின் தன்மை, வேகப்பந்துவீச்சு அனைத்தையும் எதிர்கொள்ளும் வகையில் தங்கள் மாற்றிக்கொள்ள குறைந்தபட்சம் ஒரு டெஸ்ட் போட்டிவரை வீரர்களுக்கு தேவைப்படும். சில நேரங்களில் இன்னும் காலம் எடுக்கலாம், இதற்காகவே டெஸ்ட் தொடருக்கு ஒருவாரத்துக்கு முன்பு அங்குசென்று, பயிற்சிப் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவார்கள்.

சமீபகாலமாக டெஸ்ட் தொடரில் இந்திய அணி விராட் கோலி தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், இங்கிலாந்திலும் அந்த நற்பெயரை தக்கவைக்க விரும்புகிறது. இதற்காக தலைமை ஏற்றுச் செல்லும் விராட் கோலி முதலில் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.

இதற்காக இங்கிலாந்தில் புகழ்பெற்ற கவுண்டி அணிகளில் விளையாடி ஆடுகளம், காலநிலை ஆகியவற்றுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

பெரும்பாலும் ‘சர்ரே’ கவுண்டி அணிக்காக விராட் கோலி விளையாடுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பிசிசிஐ அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘விராட் கோலி இங்கிலாந்து தொடருக்கு முன்பாக கவுண்டி அணியில் விளையாடி தன்னை தயார்படுத்திக்கொள்ள இருக்கிறார். இதற்காக சர்ரே மற்றும் எஸெக்ஸ் அணியுடன் பேச்சு நடத்தி வருகிறார். பெரும்பாலும் சர்ரே அணிக்கு விளையாடுவது உறுதியாகிவிடும்’ எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்து எதிரான 5 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற தீவிரமான நோக்கத்தில் விராட் கோலி இருந்துவருகிறார். இதனால், ஜுன்14-ம் தேதி பெங்களூருவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விராட் கோலி பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.

ஐபிஎல் போட்டித்தொடரில் பெங்களூரு அணிக்கு தலைமை ஏற்கும் விராட் கோலி, அந்த தொடர் முடிந்தவுடன், இங்கிலாந்து புறப்படுவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றிருந்த விராட் கோலி அப்போது ஒரு அரைசதம் கூட அடிக்கமுடியாமல் மிக மோசமாக விளையாடினார். அந்த பெயரை மாற்ற இந்த முறை தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

குறிப்பாக ‘ஆப்-ஸ்டெம்புக்கு’ வெளியே ‘கவர்ச்சிக் கன்னி’ முறையில் வீசப்படும் ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆன்டர்சன் பந்துகளை அவசரப்பட்டு அடிக்க முற்பட்டு ஸ்லிப்களில் கேட்ச் கொடுத்து கோலி ஆட்டமிழந்தார். இந்த முறை அந்த தவறுகளை திருத்த கோலி முயற்சித்து வருகிறார்.

மேலும், இங்கிலாந்து காலநிலைக்கு ஏற்க எளிதாக தயாராகிக் கொள்ளக்கூடிய மாறிக்கொள்ளக்கூடிய வீரர்களையும், டெஸ்ட் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டுள்ள வீரர்களைத் தேர்வு செய்வதிலும் பிசிசிஐ தீவிர முனைப்புடன் இருந்து வருகிறது.

தற்போது யார்க்சையர் அணிக்காக விளையாடிவரும் சட்டீஸ்வர் புஜாரா, துர்ஹாம் அணிக்காக விளையாடிவரும் இசாந்த் சர்மா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்ப அழைக்கப்படுவார்கள். மேலும், சில மூத்த இந்திய வீரர்களும் அணிக்கு திரும்ப அழைக்கப்படுவார்கள். முரளி விஜய், அஜின்கய ரகானே ஆகியோருக்கு சிறப்பு சிறப்பு பயிற்சி அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x