Published : 09 Mar 2018 09:26 AM
Last Updated : 09 Mar 2018 09:26 AM

தோனி, கோலி ஆலோசனையில் உருவாக்கப்பட்ட பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த ஏ+ பிரிவு

பிசிசிஐ-யின் புதிய வீரர்கள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட ரூ.7 கோடி ஏ+ பிரிவுக்கு முன்னாள் கேப்டன் தோனியும், இந்நாள் கேப்டன் விராட் கோலியுமே பிரதான காரணம் என்று உச்ச நீதிமன்றம் நியமித்த பொறுப்பு கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டி தெரிவித்துள்ளது.

ஆனால் இதற்கு முன்னிலை காரணமாக அமைந்தவர் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே. தன் பயிற்சியாளர் பதவியைத் துறப்பதற்கு முன்பாக கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டியிடமும் பிசிசிஐ உயரதிகாரிகளிடமும் வீரர்கள் சம்பளத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைய அனில் கும்ப்ளே பேச்சு வார்த்தை நடத்தினார், ஆனால் கும்ப்ளேயின் கொடுத்த மாதிரியின் படி டாப் பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடிதான் என்று தெரிகிறது.

அதன் பிறகு வினோத் ராய், அடுல்ஜி, ராகுல் ஜோஹ்ரி அடங்கிய குழு இது பற்றி வீரர்கள் கருத்தை கேட்டறிந்தது. அதன்பிறகு கோலி, ரோஹித் சர்மா, தோனி, தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் அடங்கிய குழுவுடன் வினோத் ராய் தலைமைக் குழு ஆலோசனை மேற்கொண்டது. அப்போது ஏ+ என்ற புதிய உயட்மட்ட பிரிவுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது.

இது குறித்து வினோத் ராய் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்குக் கூறும் போது, “உரையாடல்களின் போது விராட் கோலி, தோனி ஆகியோரிடமிருந்து உருவான ஆலோசனையே இந்த புதிய ஏ+ உயர்மட்டப் பிரிவு. அதாவது இதன் தர்க்கம் என்னவெனில் 3 கிரிக்கெட் வடிவங்களிலும் ஆடுபவராக இருக்க வேண்டும், ஆட்டத்திறனுக்கு ஏற்ற பரிசு. ஆகவே எந்த ஒருநிலையிலும் நிரந்தரமாக வீரர்கள் இருக்க முடியாது. சரியாக ஆடவில்லை எனில் அவர் கீழுள்ள பிரிவுக்குத்தள்ளப்படுவார்” என்றார்.

3 வடிவங்களிலும் விளையாட வேண்டும் என்ற அளவு கோல் இருப்பதால்தான் அஜிங்கிய ரஹானே ஏ+ உயர்மட்ட பிரிவில் சேர்க்கப்படவில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் உயர்மட்டப் பிரிவை உருவாக்கியது என்னவோ கிரிக்கெட் நிர்வாகம்தான், ஆனால் அதற்கான வீரர்களைத் தேர்வு செய்யும் பணி தேசிய அணித்தேர்வுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது என்கிறார் வினோத் ராய்.

இதனையடுத்து ஏ+ பிரிவுக்கு கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கோலி, ரோஹித், பும்ரா, தவன் 3 வடிவங்களில் ஏதாவது ஒன்றில் ஐசிசி தரவரிசையில் டாப் 10-ல் இருப்பவர்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர், புவனேஷ்வர்குமாரின் சமீபத்திய ஆட்டமும், அணிக்கு அவரது பங்களிப்பு இன்றியமையாததாகவும் உள்ளதால் அவர் பெயர் ஏ+ பிரிவில் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் நிச்சயம் டெஸ்ட் போட்டியில் ஒரு திறமையையும் வெளிப்படுத்தாத ரோஹித் சர்மாவுக்குப் பதில் ஏ+ பிரிவில் நிச்சயம் ரஹானே இடம்பெற்றிருக்க வேண்டும் என்று பலரும் கூறிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x