Last Updated : 01 Mar, 2018 08:05 PM

 

Published : 01 Mar 2018 08:05 PM
Last Updated : 01 Mar 2018 08:05 PM

2019 உலகக்கோப்பையை வெல்ல கோலியின் ஆக்ரோஷமும் தோனியின் ஆர்பாட்டமில்லாத அமைதியும் அவசியம்: கபில்தேவ் கருத்து

 

இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டராக வர பேட்டிங்கில் கவனம் செலுத்தி மேம்படுத்துவது அவசியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுறுத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டு இருந்த இந்திய அணியில் இடம் பெற்று இருந்த ஹர்திக் பாண்டியா, முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் 93 ரன்கள் சேர்த்தார். அடுத்த 2 போட்டிகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை. அவர் மீதான எதிர்பார்ப்பை இது குறைத்தது.

இந்நிலையில், மொனாகோ நகரில் நடந்த லாரஸ் உலக விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வந்திருந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

இந்திய அணியின் இளம் வீரரும், ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா நெருக்கடி இல்லாமல், அழுத்தம் இல்லாமல் விளையாட வேண்டும். இப்போது பாண்டியா அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார், திறமையானவர், நன்றாக விளையாடக் கூடியவர்.

மற்ற நாட்டு ஆல்ரவுண்டர்களோடு ஒப்பிடும் போது, அவர் மீது அதிகமான அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்ற கருதுகிறேன். போட்டிகளின் போது ஹர்திக் பாண்டியா அழுத்தமின்றி, நெருக்கடியின்றி அனுபவித்து விளையாட வேண்டும்.

ஆல்ரவுண்டர் என்று சொல்லக்கூடிய ஒரு வீரரிடம் இரு திறமைகள் மேம்பட்டு இருக்க வேண்டும். பந்துவீச்சும், பேட்டிங்கும் மிகவும் முக்கியம். ஹர்திக் பாண்டியாவுக்கு இயல்பாகவே பேட்டிங் திறமை நிறைந்தவராக இருக்கிறார். ஆதலால் பேட்டிங்கில் சிறிது கவனம் செலுத்தினாலே அவர் சிறந்த ஆல்ரவுண்டராக ஒளிர வாய்ப்பு ஏற்படும். பந்துவீச்சு தானாகவே வந்துவிடும். பாண்டியா இளம் வீரராக இருப்பதால், ஒவ்வொருவரும் அவர் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்து இருக்கிறார்கள்.

முதலில் அவரிடம் இருந்து நாம் அதிகமான விஷயங்களை எதிர்பார்த்தோம். என்னைப் பொருத்தவரை அணியில் நன்கு உடல்தகுதியுடன் இருக்கும் வீரர்களில் பாண்டியா முக்கியமானவர். ஆதலால் சிறிது கடினமாக உழைத்தால், வெற்றிகரமான ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா வலம்வர வாய்ப்புகள் அதிகம்.

அடுத்த ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டமும், முன்னாள் கேப்டன் தோனியின் அமைதியான, ஆர்பாட்டமில்லாத ஆட்டமும் மிக அவசியம்.

ஒவ்வொருவரும் ஆக்ரோஷமாக அணியில் இருந்தாலும்சிக்கல், அனைவரும் அமைதியாக தோனியைப் போல் இருந்தாலும் சிக்கல். ஆதலால், இருவரையும் போல் ஆக்ரோஷமும், அமைதியும் நிறைந்தவாறு இருத்தல் அணிக்கு உதவும்.

ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின் ஆகிய சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சமீபகாலமாக அணியில் இடமில்லை. அதேசமயம், ரிஸ்ட் ஸ்பின்னர்களும்சிறப்பாக பந்துவீசுகிறார்கள்.

சச்சின், ராகுல், சேவாக், லட்சுமண் ஆகிய மூத்த வீரர்கள் கடந்த 5 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற நிலையில், இந்தியஅணி மீண்டும் மீண்டு எழுந்து வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அடுத்து வரக்கூடிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியத் தொடர்களில் கோலி தலைமையில் இந்தியஅணி சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x