Published : 08 Mar 2018 09:39 AM
Last Updated : 08 Mar 2018 09:39 AM

புதிய சம்பள ஒப்பந்தம் வெளியானது: கோலி உள்ளிட்ட 5 வீரர்களுக்கு ரூ.7 கோடி- தோனி, அஸ்வின் ரூ.5 கோடி பெறுவார்கள்

பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய ஊதிய ஒப்பந்த பிரிவில் ஏ பிளஸ் ஒப்பந்த பிரிவில் கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதேசமயம், ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி தொடர்ந்து ஏ பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

2017 செப்டம்பர் முதல் 2018-ம் ஆண்டு செப்டம்பர் வரை இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதுவரை ‘ஏ’, ‘பி’, ‘சி’ ஆகிய 3 பிரிவுகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது புதிதாக இந்த ஆண்டு ‘ஏ பிளஸ்’ என்ற பிரிவு உருவாக்கப்பட்டு அதில் 5 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

‘ஏ பிளஸ்’ ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 7 கோடி ஊதியமும், ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், ‘பி’ பிரிவில் ரூ.3 கோடியும், ‘சி’ பிரிவில் ஒரு கோடியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘ஏ பிளஸ்’ பிரிவில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன், வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம் கிடைக்கும்.

‘ஏ’ பிரிவில் எம்.எஸ்.தோனி, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, முரளி விஜய், புஜாரா, அஜிங்க்ய ரஹானே, விருதிமான் சாஹா ஆகிய 7 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ. 5 கோடி ஊதியம் அளிக்கப்படும். ‘பி’ பிரிவில் கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியம் கிடைக்கும்.

கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, அக்சர்படேல், கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, பார்தீவ் படேல், ஜெயந்த் யாதவ் ஆகியோர் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படும். மொகமது ஷமி இதில் எந்தப்பிரிவிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பள ஒப்பந்தப் பட்டியலில் இருந்து முகமது ஷமியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவருடைய மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூத்த வீரரான யுவராஜ் சிங், இளம் வீரரான ரிஷப் பந்த் ஆகியோருக்கு பட்டியலில் இடம் அளிக்கப்படவில்லை. மாறாக சுரேஷ் ரெய்னாவுக்கு மீண்டும் சம்பள ஒப்பந்த பட்டியலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ஏ பிரிவில் இடம் பெற்ற வீரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 கோடி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இது ஏ பிளஸ் பிரிவாக மாற்றப்பட்டு ரூ.7 கோடியாக சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இது 350 சதவீத உயர்வாகும். இதே போல் 2-வது பிரிவில் இடம் பெற்றுள்ளவர்களின் சம்பளம் 500 சதவீதம் உயர்ந்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் சம்பளமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. 4 நாட்கள் கொண்ட போட்டியில் விளையாடும் வீரர்களின் சம்பளம் 40 ஆயிரத்தில் இருந்து ரூ.1.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இவற்றுடன் ஒளிபரப்பு உரிமம் வாயிலாக கிடைக்கும் தொகையை சேர்த்தால் ஒரு ஆட்டத்துக்கு ரூ.3 லட்சம் வரை பெற வாய்ப்பு உள்ளது.

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளில் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளான மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, ஹர்மான்பிரீத் கவுர், ஸ்மிதி மந்தனா ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x