Published : 16 Mar 2018 03:35 PM
Last Updated : 16 Mar 2018 03:35 PM

நேபாள கிரிக்கெட்டின் மிகப்பெரிய தினம்: ஒருநாள்போட்டி சர்வதேச அணி என்ற தகுதி பெற்றது

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியதையடுத்து நேபாளத்துக்கு ஒருநாள் சர்வதேச அணி அந்தஸ்து கிடைத்தது.

நெதர்லாந்து அணிக்கு 2022 வரை ஒருநாள் சர்வதேச அணி அந்தஸ்து ஏற்கெனவே பெற்றுவிட்டதால் நெதர்லாந்து அணியின் இந்த வெற்றி மூலம் ஹாங்காங் அணியைப் பின்னுக்குத் தள்ளி நேபாளம் ஒருநாள் கிரிக்கெட் அணி தகுதியைப் பெற்றது. அசோசியேட் அணிகளில் 3வது இடம் பிடித்ததால் நேபாளத்துக்கு இந்த ஒருநாள் சர்வதேச அணி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

ஹாங்காங், பபுவா நியு கினியா ஆகியவை ஒருநாள் சர்வதேச அணி என்ற தகுதியை இழந்து விட்டன.

கடந்த மாதம் கனடா அணிக்கு எதிராக நேபாள் அணியின் கே.சி.கரன், சந்தீப் லமிச்சான் இணைந்து கடைசி விக்கெட்டுக்காக 51 ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்றது உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்கு நேபாளத்தைக் கொண்டு வந்தது.

இப்போதும் அதே ஒரு பதற்றமான சூழல் நெதர்லாந்தின் 175 ரன்கள் இலக்கை எதிர்த்து ஹாங்காங் 80/3 என்று இருந்தது. நேபாள் வீரர்கள் ஹாங்காங் அணி தோற்க வேண்டும் என்று நகத்தைக் கடித்துத் துப்பிய படியே பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததாக அதன் கேப்டன் காட்கா தெரிவித்தார். ஹாங்காங்கின் அடுத்த 3 விக்கெட்டுகள் சரிவடைந்தது. ஹாங்காங் கேப்டன் அதிரடி வீரர் பாபர் ஹயாத் மட்டும் ஹாங்காங்கின் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் நின்று கொண்டிருந்தார். ஆனால் அவரும் 62 ரன்களில் ஆட்டமிழக்க ஹாங்காங் தோல்வி தவிர்க்க முடியாததாகி 130 ரன்களுக்குச் சுருண்டது.

2022-ம் ஆண்டு வரை ஒருநாள் சர்வதேச அணி தகுதி பெற்றது நேபாளம், இதனால் இன்னும் கூடுதல் கிரிக்கெட், நிதிவரத்து, கிரிக்கெட் வளர்ச்சி ஆகியவை ஏற்படும் என்று நேபாள கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x