Published : 08 Mar 2018 09:40 AM
Last Updated : 08 Mar 2018 09:40 AM

முத்தரப்பு டி 20 தொடரில் இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்: தோல்வியில் இருந்து மீண்டு வருமா ரோஹித் சர்மா குழு?

முத்தரப்பு டி 20 தொடரில் இந்தியா தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று வங்கதேச அணியுடன் மோதுகிறது.

கொழும்பில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது. 175 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி குசால் பெரேராவின் ஓய்வில்லாத ஆக்ரோஷமான ஆட்டத்தால் எளிதாக வெற்றியை வசப்படுத்தியது. குசால் பெரேரா 37 பந்துகளில் 66 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியிடம் தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் அடைந்த தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது இலங்கை அணி.

போட்டி தொடங்குவதற்கு முன்னர் வரை இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தக்கக்கூடும் என கருதப்பட்ட நிலையில் போட்டியை நடத்திய இலங்கை ஆச்சர்யம் அளிக்கும் வகையில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியானது கடந்த 6 மாத காலமாக இந்திய அணியிடம் அடைந்த தோல்விகளுக்கு இலங்கை பதிலடி கொடுத்ததாகவே கருதப்படுகிறது. இந்திய அணியின் தோல்விக்கு அனுபவம் இல்லாத பந்து வீச்சாளர்கள் பிரதான காரணமாக அமைந்தனர். முதன்மை சுழற் பந்து வீச்சாளரான சாஹல் உட்பட எந்த பந்து வீச்சாளருமே வெற்றியைத் தேடித் தவரும் வகையிலான செயல் திறனை வெளிப்படுத்தவில்லை.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “எங்களது பந்து வீச்சாளர்கள் அனைத்தையும் முயற்சி செய்து பார்த்தார்கள், ஆனால் சில நேரங்களில் நாம் விரும்பியபடி எதுவும் நடைபெறாது. அடுத்த ஆட்டத்தில் வலுவாக மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங்கை மோசமான வகையில் தொடங்கினாலும் ஷிகர் தவணின் அதிரடியால் சற்று வலுவான இலக்கை கொடுக்க முடிந்தது. ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், ரெய்னா 1 ரன்னிலும் வெளியேறிய நிலையில் இந்திய அணி பவர் பிளேவில் வெறும் 40 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதேவேளையில் இலங்கை பவர் பிளேவில் 75 ரன்கள் விளாசியது. ஆட்டத்தின் முடிவில் இரு அணிக்கும் இடையே இது பெரிய வித்தியாசத்தை காட்டியது.

மணீஷ் பாண்டே (37), ரிஷப் பந்த் (23) ஆகியோர் பந்துகளுக்கு நிகராகவே ரன்கள் சேர்த்தனர். இதுவும் இந்திய அணி பெரிய அளவிலான ஸ்கோரை குவிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணிகளாக அமைந்தது. இதில் மணீஷ் பாண்டே களமிறங்கிய போது இந்திய அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து நெருக்கடியை சந்தித்தது. இதனால் அவர், நிதானமாக விளையாட வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இளம் வீரரான ரிஷப் பந்த் மட்டையை சுழற்ற தவறினார்.

இன்றைய ஆட்டத்தில் அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த அக்சர் படேல் களமிறக்கப்படக்கூடும். இதேபோல் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக முகமது சிராஜிக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என கருதப்படுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் இந்தத் தொடரில் விளையாடாத நிலையில் தற்போது அணியில் இடம் பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் மட்டும் அல்ல கடைசி கட்ட ஓவர்களிலும் ரன் குவிப்பை கட்டுப்படுத்த வேண்டும். அப்போது தான் இந்தியா தோல்வியிலிருந்து மீள முடியும்.

வங்கதேச அணியை மஹ்மதுல்லா வழிநடத்த உள்ளார். அந்த அணி தனது உள்நாட்டில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், டி 20 தொடர், டெஸ்ட் தொடர் ஆகியவற்றை இலங்கை அணியிடம் இழந்த நிலையில் தற்போது முத்தரப்பு டி 20 தொடரை அணுகுகிறது.

அந்த அணியின்தமிம் இக்பால் கூறுகையில், “எனக்கும், எங்களது அணிக்கும் இலங்கையில் வித்தியாசமான சவால் இருக்கிறது.சில சந்தர்ப்பங்களில் நாங்கள் அதிகம் பயந்துவிடுகிறோம் என்றே கருதுகிறேன். ஒரு அணியாக நாம் அதை கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.

அணிகள் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், சாஹல், அக்சர் படேல், விஜய் சங்கர், ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ்.

வங்கதேசம்: மஹ்முதுல்லா (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ், முஸ்பிஹூர் ரகிம், சபிர் ரஹ்மான், முஸ்டாபிஸூர் ரஹ்மான், ரூபல் ஹோசைன், தஸ்கின் அகமது, அபு ஹைதர், அபு ஜயத், அரிபுல் ஹக்யு, நஸ்முல் இஸ்லாம், நூருல் ஹசன், மெகதி ஹசன், லிட்டன் தாஸ். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x