Published : 31 May 2019 08:54 PM
Last Updated : 31 May 2019 08:54 PM

105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்ற பாக். - இது நல்ல பேட்டிங் பிட்சாம்.. சொல்கிறார் கேப்டன் சர்பராஸ் அகமட்

உலகக்கோப்பை 2019 தொடங்கி முதல் இருபோட்டிகளுமே சவாலின்றி ஒருதலைப் பட்சமான போட்டிகளாக முடிந்துள்ளது. நேற்று தென் ஆப்பிரிக்கா போட்டியின்றி சரணடைந்தது, இன்று பாகிஸ்தானை மே.இ.தீவுகள் துவம்சம் செய்துள்ளது.

 

டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பிட்சின் தன்மையைப் புரிந்து கொண்டு முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தார். அந்த அணியும் பகார் ஜமான், இமாம் உல்ஹக், பாபர் ஆசம், சோஹைல் என்று ஒரு நல்ல பேட்டிங் லைன் அப் கொண்டதுதான்.

 

ஆனால் மே.இ.தீவுகள் பவுலர்கள் பவுன்சர் உத்தியக் கடைபிடித்து கொதிமணலில் வெறுங்காலில் குதிப்பது போல் பாகிஸ்தான் பேட்ஸ்மென்களை குதிக்கச் செய்து 105 ரன்களுக்குச் சுருட்டித் தள்ளினர். விக்கெட் விழுந்த வேகத்தைப் பார்த்தால் இன்னொரு வீரருக்கு பேடு கட்ட கூட நேரம் கிடைத்திருக்காது. 105 ரன்களுக்குச் சுருண்ட பிறகு கிறிஸ் கெய்ல் பாகிஸ்தான் பந்து வீச்சையும் ஒன்றுமில்லாமல் செய்ய மே.இ.தீவுகள் உணவு இடைவேளைக்கு முன்னரே வெற்றி பெற்றது.

 

பிட்சில் பவுலர்களுக்கு உதவி இருக்கும் என்பதை டாசில் ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் கேட்பன் சர்பராஸ் அகமட் மேட்ச் முடிந்த பிறகு இவ்வாறு கூறினார்:

 

டாஸையும் இழந்து தொடக்கத்தில் விக்கெட்டுகளையும் இழந்தால் நிச்சயம் எந்தப் போட்டியிலும் வெற்றிக்கு அருகில் கூட வர முடியாது. அரைமணி நேரத்துக்குக் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும், ஆனால் இது நல்ல பேட்டிங் பிட்ச், நாங்கள் ஒழுங்காக ஆடவில்லை.

 

பாசிட்டிவ்வாக அடித்து ஆடியிருக்க வேண்டும், அதைச் செய்யவில்லை. பார்ப்போம் அடுத்த போட்டியில் சரி செய்து மீண்டெழுவோம்.  மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கள் மீது பாய்வார்கள் என்று தெரியும். ஆனால் நாங்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளைச் சரியாகக் கையாளவில்லை.

 

இன்று மோசமான நாளாக அமைந்தது, மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மொகமது ஆமிர் நன்றாக வீசியது மகிழ்ச்சியளிக்கிறது.

 

இவ்வாறு கூறினார் சர்பராஸ் அகமட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x