Last Updated : 03 Feb, 2019 09:12 AM

 

Published : 03 Feb 2019 09:12 AM
Last Updated : 03 Feb 2019 09:12 AM

போல்ட் பந்துவீச்சுக்கு திணறும் இந்திய பேட்ஸ்மேன்கள்: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

டிரன்ட் போல்ட், ஹென்ரி பந்துவீச்சுக்குத் திணறிய இந்திய பேட்ஸ்மேன்கள் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றனர்.

காயத்தில் இருந்து திரும்பிய தோனி ஒரு ரன்னில் வெளியேறினார், இளம் வீரர் சுப்மான் கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த முறையும் ஏமாற்றினார்.

வெலிங்டனில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடந்து வருகிறது. 3-0 என்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றி விட்டநிலையிலும், 4-வது போட்டியில் இந்திய அணியை மோசமான தோல்வி அடையச் செய்தது நியூசிலாந்து. கடைசிப் போட்டியையும் வெற்றியுடன் முடிக்க இரு அணிகளும் தீவிரமாக உள்ளனர்.

இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. தினேஷ் கார்த்திக்கு பதிலாக தோனி சேர்க்கப்பட்டார். காயத்தில் இருந்து மீண்டதால் தோனி களமிறங்கினார். கலீல் அகமது,குல்தீப் யாதவுக்கு பதிலாக விஜய் சங்கர், முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமானது, பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும் எனத் தெரிந்திருந்தும் முதலில் பேட்டிங் செய்ய ரோஹித் சர்மா ஏன் தீர்மானித்தார் எனத் தெரியவில்லை.

பிட்ச் ரிப்போர்ட்டில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்தவு செய்தால், ஆடுகளத்தின் ஈரப்பதம், தன்மையைப் பயன்படுத்தி விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே வீழ்த்தி நெருக்கடி அளிக்க முடியும். இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், 2-வதாக பந்துவீசும் அணிக்குச் சிரமம் ஏற்படும் என்று தெரிவித்தனர். ஆனால் ஏன் பேட்டிங்கை தேர்வு செய்தார் என்பது புரியாமல் இருக்கிறது.

ரோஹித் சர்மா, தவண் களமிறங்கினார்கள். டிரன்ட் போல்ட், ஹென்ரி பந்துவீச்சு தொடக்கத்தில் இருந்தே இந்திய பேட்ஸ்மேன்கலுக்கு கிலி ஏற்படுத்தியது. 140 கிமீ வேகத்தில் வந்த பந்துகள், ஸ்விங் ஆகியதால், சமாளித்து பேட் செய்ய தவண், ரோஹித் சர்மா திணறினார்கள். ரன் சேர்ப்பிலும் மந்தமாகச் செயல்பட்டனர்.

ஹென்ரி வீசிய 5-வது ஓவரின் முதல் பந்தை ரோஹித் சர்மா எதிர்கொண்டார். பந்து அருமையாக ஸ்விங் ஆகி ஸ்டெம்பை பதம் பார்த்தது. 2 ரன்களுடன் ரோஹித் சர்மா ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

அடுத்து சுப்மான் கில் களமிறங்கினார். 6-வது ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ஹென்ரியிடம் கேட்ச் கொடுத்து தவண் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஹென்ரி வீசிய 7-வது ஓவரில் கில் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து கில் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளிலும், இந்திய ஏ அணியிலும் விளையாடிய கில்லை சர்வதேச போட்டிகளுக்கு போதுமான அனுபமின்றி விளையாட வைத்தது மிகப்பெரிய தவறாகும். இன்னும் கால்களை நகர்த்தி விளையாடுவதற்கு அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இருக்கும் பந்துவீச்சுக்கும், சர்வதேச போட்டிகளில் வீரர்களின் பந்துவீச்சுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. இரு பொன்னான வாய்ப்புகளை சுப்மான் கில் இழந்துவிட்டார்.

அடுத்து தோனி களமிறங்கி, ராயுடுவுடன் இணைந்தார். காயத்தால் இரு போட்டிகளில் களமிறங்காமல் இருந்த தோனி இந்த ஆட்டத்தில் விளையாடினார். ஆனால், 6 பந்துகளை மட்டுமே சந்தித்த தோனி ஒரு ரன் சேர்த்த நிலையில் டிரன்ட் போல்ட் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு ராயுடு, விஜய் சங்கர் இணைந்து நிதானமாக விளையாடி வருகின்றனர். 22 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்துள்ளது இந்திய அணி. ராயுடு 14 ரன்களிலும், விஜய் சங்கர் 25 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x