Published : 24 Jan 2019 04:15 PM
Last Updated : 24 Jan 2019 04:15 PM

கேரளாவை ஊதித்தள்ளிய உமேஷ் யாதவ்; உணவு இடைவேளைக்கு முன்னரே 106 ரன்களுக்கு ஆல் அவுட்

ரஞ்சி அரையிறுதிப் போட்டியில் விதர்பா அணி கேரளா அணியை முதல் இன்னிங்சில் 106 ரன்களுக்குச் சுருட்டியது, இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 48 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ரஞ்சியில் தன் சிறந்த பந்து வீச்சுச் சாதனையை நிகழ்த்தினார்.

 

வயநாடு கிருஷ்ணகிரி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் விதர்பா அணி முதலில் கேரளாவை பேட் செய்ய அழைத்தது.  வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆட்டக்களத்தில் உமேஷ் யாதவ்வை ஆட முடியவில்லை. 28.4 ஓவர்களில் 106 ரன்களுக்குக் கேரளா சுருண்டது. உமேஷ் யாதவ் 12 ஒவர்களில் 48 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

8 விக்கெட்டுகளை உமேஷ் யாதவ் கைப்பற்றியிருக்க வேண்டியது, ஆனால் எம்.நிதீஷ் என்ற கேரள வீரர் கொடுத்த கேட்சை வாசிம் ஜாஃபர் லாங் ஆனில் நழுவவிட்டார். கேரள அணியில்  விஷ்ணு விநோத் மட்டுமே அதிகபட்சமாக 37 ரன்களை எடுத்தார்.  டாப் ஆர்டரில் கேப்டன் சச்சின் பேபி மட்டுமே 22 ரன்கள் என்ற இரட்டை இலக்க ஸ்கோரை எட்டினார். இவருடன் வீசிய இன்ஸ்விங்கர் ஸ்பெஷலிஸ்ட் ரஜ்னீஷ் குர்பானி மீதி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

 

உத்தராகண்ட் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் உமேஷ் யாதவ் மேட்சில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

2010-11 ரஞ்சி சீசனில் உமேஷ் யாதவ், மஹாராஷ்டிர அணிக்கு எதிராக 7/74 எடுத்ததை இன்று முறியடித்து 7/48 என்று சுயசாதனை நிகழ்த்தியுள்ளார். விதர்பா அணி 131/2 என்று வலுவான நிலையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x