Published : 30 Jan 2019 05:51 PM
Last Updated : 30 Jan 2019 05:51 PM

தனது 200வது ஒருநாள் போட்டியில் கேப்டனாகக் களமிறங்கும் ரோஹித் சர்மா: கோலி இல்லாத இந்தியாவை வீழ்த்தி வெற்றி வழிக்கு திரும்பும் முனைப்பில் நியூஸிலாந்து

நாளை (31-1-19, வியாழன்) ஹாமில்டன் செடான் பார்க்கில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் 4வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் களமிறங்குகின்றன. கோலி இல்லாத இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக தனது 200வது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறார்.

 

ஏற்கெனவே தொடரை இழந்த நிலையில் நியூஸிலாந்து வெற்றியுடன் முடிக்கப் போராட வேண்டும், மாறாக இந்திய அணி தன் அணிச்சேர்க்கையை ஸ்திரப்படுத்த புதிய முயற்சிகளில் இறங்கும்.

 

கடந்த போட்டியில் ஆடாத தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.  எனவே நாளைய போட்டியில் இவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணி இவ்வாறு இருக்க வாய்ப்புள்ளது: 1.ரோஹித் சர்மா, 2.ஷிகர் தவன், 3.ராயுடு, 4.ஷுப்மான் கில், 5.தோனி, 6.தினேஷ் கார்த்திக், 7.பாண்டியா, 8.கேதார் ஜாதவ், 9.சாஹல், 10.புவனேஷ்வர் குமார், 11.ஷமி.

 

 

ஒருநாள் தொடரில் 2013க்குப் பிறகு 3 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வி கண்ட நியூஸிலாந்து தன் மானத்தைக் காப்பாற்றி கொள்ளவாவது இந்த 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.  தோல்வி பிரச்சினையல்ல தோல்வி அடைந்த விதம், முழுக்க முழுக்க இந்திய அணியின் ஆதிக்கமே தெரிந்தது.

 

நியூஸிலாந்து அணியின் பிரச்சினை மிடில் ஆர்டர்தான், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லேதம் வரிசையில் ராஸ் டெய்லர் மட்டுமே 93 ரன்களை எடுத்துள்ளார், கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்த விதமும் துரதிர்ஷ்டமும், கவலையளிக்கும் விதத்தையும் சேர்ந்து நியூஸிலாந்துக்கு அளித்துள்ளது.

 

வெறும் ஸ்பின் மட்டும் பிரச்சினையல்ல, பாண்டியா அன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார், மொகமது ஷமி தொடக்கத்தில் விக்கெட்டுகளை சாய்த்து வருகிறார், ஆகவே ஒட்டுமொத்தமாக நியூஸிலாந்து அணியின் அணுகுமுறையில் சட்டக மாற்றம் (Paradigm Shift) நடந்ததால்தான் வெற்றி சாத்தியம்.

 

தொடக்க வீரர்களான மார்டின் கப்தில் 3 ஆட்டங்களில் 33 ரன்களையும், கொலின் மன்ரோ 46 ரன்களையும் எடுத்து சொதப்பி வருகின்றனர். பின் நடுவரிசையான ஹென்றி நிகோல்ஸ், சாண்ட்னர், கொலின் டி கிராண்ட் ஹோம் நன்றாகத் தொடங்குகின்றனர், ஆனால் விரைவில் மடிந்து விடுகின்றனர். அணிக்கு ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் வந்துள்ளார்.

 

மேலும் வலுவான இந்திய பேட்டிங்கை காலி செய்யும் பிட்ச்களும் இல்லை பந்து வீச்சும் நியூஸிலாந்தில் இல்லை என்பதே உண்மை. ஆகவே நாளைய போட்டியிலும் இந்தியாதான் வெற்றி பெறும் அணியாக தொடங்குகிறது.

 

இந்திய அணியில் விராட் கோலி இல்லாத நிலையில் ஷுப்மான் கில் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது, 36 லிஸ்ட் ஏ போட்டியில் கில் சராசரி 47.78 ஆகும்.

 

பந்து வீச்சில் வேண்டுமானால் இந்தியா புவனேஷ்வர் குமாருக்கோ, ஷமிக்கோ ஓய்வு அளித்து சிராஜ் அல்லது கலீலை முயற்சி செய்ய முடிவெடுக்கலாம், ஆனால் எதுவும் முடிந்த முடிவாகக் கூற முடியவில்லை. ரோஹித் சர்மா இன்னமும் நியூசிலாந்து மண்ணில் சதம் அடிக்கவில்லை.

 

இதே மைதானத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 285 ரன்களை நியூஸிலாந்து வெற்றிகரமாக விரட்டியது. எனவே இதுவும் அத்தகைய ஸ்கொர் போட்டியாக அமைய வாய்ப்புள்ளது.

 

போட்டி வழக்கம் போல் பகலிரவு போட்டி. இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x