Published : 07 Jan 2019 09:09 AM
Last Updated : 07 Jan 2019 09:09 AM

33 வருடங்களுக்குப் பிறகு தாய்லாந்தை 4-1 வீழ்த்தி இந்தியா அபார சாதனை

24 அணிகள் கலந்துகொண்டுள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று தாய்லாந்துடன் மோதியது. அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 27-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி சுனில் சேத்ரி கோல் அடிக்க இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆனால் அடுத்த 6-வது நிமிடத்தில் தாய்லாந்து அணி பதிலடி கொடுத்தது. தீரத்தன் புன்மதனிடம் இருந்து பெற்ற கிராஸை பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டி கோலாக மாற்றினார் டிரசில் டங்டா. இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. 2-வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி கூடுதல் உத்வேகத்துடன் செயல்பட்டது. 46-வது நிமிடத்தில் ஆஷிக் குரூனியன் உதவியுடன் பந்தை பெற்ற சுனில் சேத்ரி, பாக்ஸின் மையப்பகுதியில்  இருந்து கோல் அடிக்க இந்திய அணி 2-1 என்ற முன்னிலையை அடைந்தது.

68-வது நிமிடத்தில் தாய்லாந்து அணி வீரர்களுக்கு போக்குகாட்டியபடி உடன்டா சிங், பந்தை அருனித் தபாபாவுக்கு தட்டிவிட அவர், இடது முனையை நோக்கி உதைத்த பந்து கோல் வலையை துளைத்தது. இதனால் இந்திய அணி 3-1 என்ற முன்னிலையை பெற்றது. 80-வது நிமிடத்தில் காலிச்சரண் நர்ஸரி உதவியுடன் ஜே ஜேலால்பெகுலா கோல் அடிக்க இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வலுவான முன்னிலையை அடைந்தது.

இதன் பின்னர் தாய்லாந்து அணி எவ்வளவோ போராடியும் அந்த அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது.

முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. தாய்லாந்து அணியை 33 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. கடைசியாக 1986-ம்ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற மெர்டிகா கோப்பையில் தாய்லாந்து அணியை தோற்கடித்திருந்தது.

இந்த ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் (தற்போதுவிளையாடி வரும் வீரர்களில்)அதிக கோல்கள் அடித்துள்ளவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸியை (65 கோல்கள்) பின்னுக்குத் தள்ளினார் இந்திய வீரர் சுனில் சேத்ரி. இதுவரை சுனில் சேத்ரி 67 கோல்கள் அடித்துள்ளார். இந்த வகையில் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 85 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x