Published : 18 Dec 2018 12:55 PM
Last Updated : 18 Dec 2018 12:55 PM

களத்தில் சண்டையிட்ட இசாந்த் சர்மா, ரவிந்திர ஜடேஜா?- இந்திய அணியில் ஒற்றுமை குறைவா?

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மாவும், ரவிந்திர ஜடேஜாவும் களத்தில் ஆவேசமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்கடித்தது. இந்தத் தோல்வியால் இந்திய அணி துவண்டு கிடக்கும் நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் ‘தி சிட்னி மார்னிங் ஹெரால்டு’ நாளேடு இந்திய அணி வீரர்களுக்கு இடையே ஒற்றுமை குறைந்துவிட்டதா என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் இந்திய அணி வீரர் இசாந்த் சர்மா, ரவிந்திர ஜடேஜா ஆகியோருக்கு இடையே திங்கள்கிழமை (நேற்று) நண்பகலில் மைதானத்தில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் ஆவேசமாகச் சண்டையிட்டனர். இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த முகமது ஷமி ஓடி வந்து இருவரையும் பிரித்து சமாதானம் செய்து விலக்கிவிட்டு அழைத்துச் சென்றார் என்று தெரிவித்துள்ளது.

அதற்குரிய ஆதாரமாக வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இசாந்த் சர்மாவும், ரவிந்திர ஜடேஜாவும் ஒருவருக்கு ஒருவர் இந்தியில் ஆவேசமாகப் பேசுவதும், மார்போடு நெருங்கி வந்து மோதுவதுபோல் பேசுவதும் போன்ற காட்சி உள்ளது.

பெர்த் டெஸ்டில் ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டபோதிலும் அவர் விளையாடவில்லை. அவர் மாற்றுவீராக களமிறங்கி பீல்டிங் செய்தார். இசாந்த் சர்மா வீசிய ஓவரில் நாதன் லயனுக்கு காதில் அடிபட்டது. அப்போதுதான் இருவருக்கும் இடையே இந்த வாக்குவாதம் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசாந்த் சர்மா, ஜடேஜா மோதலைப் பார்த்த ஆஸி. முன்னாள் வீரர் பாண்டிங், “இரு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது தெரிகிறது. ஒருவேளை ஏதேனும் ஆவேசமாக இருவரும் பேசிக்கொள்கிறார்களா எனத் தெரியவில்லை. இருவரும் விரல்களை உயர்த்திக்காட்டிப் பேசுவதால், சாதாரணமான பேச்சு நடக்க வாய்ப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “ இசாந்த், ஜடேஜா இடையே வாக்குவாதம் நடப்பதாக வீடியோவில் தெரிகிறது. ஆனால், உண்மையில் என்ன பேசிக்கொண்டார்கள், எதற்காக ஆவேசமாகச் சண்டையிட்டார்கள் என்பது தெரிய வேண்டும். இல்லாவிட்டால் இது ஜோடிக்கப்பட்டதா என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x