Last Updated : 08 Nov, 2018 01:12 PM

 

Published : 08 Nov 2018 01:12 PM
Last Updated : 08 Nov 2018 01:12 PM

விராட் கோலியின் ஐபிஎல் கோரிக்கையில் மாறுபடும் ரோஹித் சர்மா: அணி உரிமையாளர்கள் தரப்பும் ஏற்கவில்லை

பிசிசிஐ-யின் கமிட்டி ஆஃப் அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் என்ற நிர்வாகக் கமிட்டியிடம் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு கோரிக்கையை முன்வைத்தார், அதாவது உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் நடைபெறுவதால் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்பதே கோலியின் கோரிக்கை.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சிஓஏ உடனான கூட்டத்தில் விரா கோலி இந்தக் கோரிக்கையை வைத்தார், குறிப்பாக பும்ரா, புவனேஷ்வர் ஆகியோரை 2019 ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து முழுதுமாக விடுவிக்க வேண்டும் என்று கோலி கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் விராட் கோலியின் இந்தக் கோரிக்கையை அணி உரிமையாளர்கள் ஏற்க மாட்டார்கள் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

“ஐபிஎல் கிரிக்கெட் மார்ச் 29-ம் தேதி தொடங்கி மே. 19-ம் தேதி நிறைவடைகிறது. இருந்தாலும் உலகக்கோப்பையில்  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் போட்டிக்கு 15 நாட்கள் இடைவெளி உள்ளது. ஜூன் 5ம் தேதி தெ.ஆவுடன் முதல் போட்டி.  எனவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஐபிஎல்-இலிருந்து ஓய்வு அளிக்க வேண்டும் என்பதற்கு வாய்ப்பேயில்லை.” என்று கூட்டத்தில் இருந்த மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ-யிடம் தெரிவித்தார்.

மேலும் ரோஹித் சர்மா, கேப்டன் விராட் கோலியின் கருத்தை ஏற்கவில்லை என்று அதே அதிகாரி கூறிய போது,  மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்போது அல்லது இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்போது பும்ரா உடற்தகுதியுடன் இருக்கும்பட்சத்தில் அவருக்கு ஓய்வு அளிக்க மாட்டோம் என்று ரோஹித் சர்மா அதே கூட்டத்தில் கூறியதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு அதிகாரி, விராட் கோலியின் கோரிக்கை வழக்கத்துக்கு விரோதமானது என்று விமர்சித்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் எல்லா போட்டிகளிலும் எப்படியிருந்தாலும் ஆடப்போவதில்லையே என்கிறார் இன்னொரு அதிகாரி.

அதாவது புவனேஷ்வர், பும்ரா, ஷமி, உமேஷ், கலீல் அகமெட் ஆகியோர் அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் ஆடப்போவதில்லை, மேலும் ஐபிஎல் அணிகளிலும் சிறந்த உடற்தகுதி நிபுணர்கள் உள்ளனர் என்று பிசிசிஐ தரப்பு உணர்வதாகத் தெரிகிறது.

மேலும், விராட் கோலி, தன் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்குமார், பும்ராவுக்கு ஓய்வு அளிக்கக் கோருவது எதிராகவும் போக வாய்ப்புள்ளது, 2 மாதங்கள் எந்த ஓரு மேட்ச் பிராக்டீசும் இல்லாமல் போய்விடும் என்று பிசிசிஐ தரப்பு உணர்வதாகத் தெரிகிறது.

அணி உரிமையாளர் ஒருவர் கூறும்போது, “நாங்கள் கலீல் அகமெடைத் தேர்வு செய்தால் அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவே பார்ப்போம், பணிச்சுமை விஷயம் கண்காணிக்கப்படும்” என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகவே விராட் கோலியின் கோரிக்கை வீணான ஒரு கோரிக்கையாகவே போய்விடும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x