Published : 30 Oct 2018 05:52 PM
Last Updated : 30 Oct 2018 05:52 PM

ரசிகர்கள் ஆத்திரம்: மும்பை கிரிக்கெட் போட்டியில் கொள்ளை லாபத்துக்கு குடிதண்ணீர் விற்ற கடை சூறை

மும்பையில் நேற்று நடந்த இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்குஇடையிலான போட்டியின் போது, மைதான அரங்கில் கொள்ளை லாபத்துக்குக் குளிர்பானம், குடிநீர் விற்ற கடையை ரசிகர்கள் சூறையாடினார்கள்

இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்குஇடையிலான 4-வது ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் அரங்கில் நடந்தது. இந்த போட்டியின் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 377 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்ஸ் முடிந்ததும், ரசிகர்கள் மைதானத்தில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் குடிதண்ணீர் கேன்களைத் தேடினார்கள். ஆனால், ரசிகர்களுக்கு போதுமான அளவு குடிதண்ணீர் அரங்க நிர்வாகம் வைக்கவில்லை.

இதனால், நாவறட்சி எடுத்து குடிக்க தண்ணீருக்கு ரசிகர்கள் தவியாய் தவித்தனர். சிலர் மைதானத்துக்குள் இருக்கும் குளிர்பானக் கடைக்கு சென்று குடிதண்ணீர் பாட்டில் வாங்கிக் குடிக்கலாம் எனச் சென்றனர். ஆனால், ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் விலை ரூ.20க்கு பதிலாக ரூ.40 என்று கடை உரிமையாளர் தெரிவித்தார்.

இதைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், விலையைக் குறைக்க முடியாது என்று கடை உரிமையாளரும் கண்டிப்பாக தெரிவித்துவிட்டார். மேலும் குளிர்பானத்தின் விலையையும் இரு மடங்கு உயர்த்திக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் கூட்டம் கடைக்குள் இறங்கினார்கள், கடை உரிமையாளரைத் தள்ளிவிட்டு, அங்கிருந்த குடிநீர் பாட்டில்களையும், குளிர்பான பாட்டில்களையும் பணம் கொடுக்காமல் தேவைக்கு அள்ளிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் மும்பை மைதானத்தின் 5-ம்எண் வாயிலிலும், 14-ம் எண் பிளாக்கிலும் நடந்தது. அங்கிருந்த போலீஸாரும் இதைப்பார்த்துக் கண்டுகொள்ளாமல் சென்றனர்.

ரசிகர்கள் செய்த ரகளையையும், சண்டையைப் பார்த்த அரங்க நிர்வாகிகள் அதிர்ந்துவிட்டனர். தங்களிடம் இருப்பு வைத்திருந்த 20லிட்டர் தண்ணீர் பாட்டில்களை அதன்பின் எடுத்துவந்து ரசிகர்களுக்குக் குடிப்பதற்காக வைத்தனர். மேலும், ரசிகர்களுக்கு கப்களிலும், சிறிய பாட்டில்களிலும் தண்ணீர் சப்ளை செய்தனர்.

இது குறித்து விசாரித்த போது, கடைகளில்இருக்கும் குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள் விற்றுத் தீர்ந்தபின் ரசிகர்களுக்கு குடிநீர்கேன்களை குடிக்க வைக்கலாம் என்று நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். ஆனால் ரசிகர்கள் செய்த ரகளையைப்பார்த்து அதிர்ந்த நிர்வாகிகள் தங்களிடம் இருப்பு வைத்திருந்த குடிநீர் கேன்களை வெளியே கொண்டு வந்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x