Published : 28 Oct 2018 10:08 AM
Last Updated : 28 Oct 2018 10:08 AM

என் பேட்டிங் பற்றிப் பேச விரும்பவில்லை; எதை நாங்கள் சரியாகச் செய்யவில்லையோ அதில் கவனம் செலுத்துவோம்: தோல்வி ஏமாற்றத்தில் விராட் கோலி

புனேயில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி இந்தியாவை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 1-1 என்று இதுவரை சமன் செய்துள்ளது. உண்மையில் பார்த்தால் ஒரு டை ஒரு வெற்றியுடன் மே.இ.தீவுகள் இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்துவது தெரிகிறது.

தனிஒருவன் கோலி தொடர்ந்து 3 சதங்கள் அடித்து ஹாட்ரிக் ஒருநாள் சதங்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்று சாதனைக்கு மேல் சாதனையாக நிகழ்த்துகிறார், ஆனால் அவருடன் ஒப்பிட 10% அளவுக்குக் கூட வீரர்கள் இல்லை. 107 ரன்களில் அவர் தனியொருவனாக வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கையில் மர்லன் சாமுவேல்ஸ் பந்தை நொறுக்கப்போய் முற்றிலும் பந்தைக் கோட்டை விட்டார் பவுல்டு ஆனார். அத்துடன் இந்திய வெற்றி வாய்ப்பு முடிந்தது.

தோனிக்குப் பிறகு ஒரு ஆல்ரவுண்டர் ஜடேஜா, அல்லது ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் இருந்திருந்தால் இந்திய அணிக்கு வலு கூடும் ஒரு கட்டத்துக்குப் பிறகு அனைவரும் பவுலர்கள் என்றால் முக்கிய கட்டத்தில் வெற்றி கைகூடாமல் போய்விடுகிறது என்பதைத்தான் கோலி தன் பேட்டியில் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

நாங்கள் நன்றாக பவுலிங் வீசினோம், 35 ஓவர்கள் வரை பிட்ச் உதவியில்லை. பின்பகுதியில் கடினமானது.  250-260 ரன்களைத்தான் விரட்டியிருக்க வேண்டும் அதிகபட்சமாக. கடைசி 10 ஓவர்களில் ரன்களை கொடுத்து விட்டோம், அதுதவிர பவுலிங் நன்றாகவே இருந்தது. பேட்டிங்கில் கூட்டணிகள் அமையவில்லை, இப்படி எப்போதும் ஆகாது.

பீல்டிங்கில் நன்றாகச் செயல்பட்டோம். எங்கள் திட்டங்களை சரியாகச் செயல்படுத்தவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அடித்து ஆடக்கூடிய அணி, அவர்கள் தினத்தில் எவ்வளவு பெரிய அணியையும் வீழ்த்தி விடுவார்கள்.  இந்தப் போட்டியில் வெற்றி பெற அவர்களுக்குத்தன தகுதி.

ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆடும்போது கூடுதல் பவுலிங் தெரிவு இருந்தது. அடுத்தப் போட்டியில் கேதார் ஜாதவ் ஆடுவார், அவர் வந்து விட்டால் இன்னும் கொஞ்சம் அணியில் சமநிலை ஏற்படும்.  ஒருபவுலரை விட்டு விட வேண்டும், எங்களுக்கு 6 பவுலிங் தெரிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்க வாய்ப்பிருந்தது. 5 பவுலர்களைத்தான் தேர்வு செய்ய முடியும்.

என் பேட்டிங் பற்றி பேச விரும்பவில்லை.  இந்தப் போட்டியில் எதை நாங்கள் நன்றாகச் செய்யவில்லையோ அதைப்பற்றி கவனம் செலுத்த வேண்டும்.  நான் மர்லன் சாமுவேல்ஸ் பவுலிங்கில் அடித்து ஆடச் சென்றேன். ஆனால் சரியாக அடிக்கவில்லை. வெற்றி, தோல்வி இரண்டையும் எங்களுடையதாக எடுத்துக் கொள்கிறோம், ஒருநாள் மோசமானதாக அமைந்து விட்டது.  திட்டங்களை இன்னும் கொஞ்சம் நன்றாகச் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x