Last Updated : 17 Aug, 2018 09:04 AM

 

Published : 17 Aug 2018 09:04 AM
Last Updated : 17 Aug 2018 09:04 AM

ஆசிய விளையாட்டில் சாதனை படைப்பாரா தீபா கர்மகார்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்கில் புரோடுனோவா பிரிவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் இந்திய வீராங்கனை தீபா கர்மகார். நூலிழையில் அவர், பதக்க வாய்ப்பை தவறவிட்டு 4-வது இடத்தை பிடித்திருந்தார். இதன் பின்னரே மகளிர் ஜிம்னாஸ்டிக்கில் இந்தியாவின் திறன்கள் வெளி உலகுக்கு பரிட்சயமாகத் தொடங்கியது. இதற்கு முன்னர் ஆடவர் பிரிவில் அலகாபாத்தைச் சேர்ந்த ஆஷிஸ் குமார் 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக வெள்ளி மற்றும் வெண்கலம் கைப்பற்றியிருந்தார். மேலும் கடந்த 2010-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆஷிஸ் குமார் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் ஜிம்னாஸ்டிக்கில் இந்திய அணி சிறப்பாக செயல்படத் தவறியது. ஆடவர் பிரிவில் இந்தியா 9-வது இடத்தையும், மகளிர் பிரிவில் இந்தியா 7-வது இடத்தையுமே பிடிக்க முடிந்தது. இந்தத் தொடரில் தீபா கர்மகார் காயம் காரணமாக பங்கேற்காததும் இந்திய அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணம். மேலும் போட்டிகள் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாகத்தான் இந்திய ஜிம்னாஸ்டிக் அணி ஆஸ்திரேலியாவை சென்றடைந்திருந்தது. அத்துடன் கடைசி நேரத்தில் அணியில் இருந்து இருவர் நீக்கப்பட்டதும் சமநிலையை குலைத்தது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் முதலில் கவுரவ் குமார், முகமது பாபி ஆகியோரை தேர்வு செய்திருந்தது. ஆனால் இவர்கள் சர்வதேச ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் உரிமம் பெறாமல் இருப்பது தெரியவந்ததையடுத்து நீக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு மாற்றாக யோகேஷ்வர் சிங், ராகேஷ் பத்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதன் பின்னர் சர்ச்சைகள் நீடித்தது. மகளிர் பிரிவு இறுதி போட்டியின் போது அருணா புத்தா ரெட்டி, பிரனிதி நாயக், பிரனிதி தாஸ் ஆகியோர் அணிந்திருந்த உடையில் தேசிய அணியின் சின்னம் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கணிசமான புள்ளிகளை அபராதமாக பெற்றனர்.

காமன்வெல்த் போட் டியில் மோசமாக செயல்பட்டதன் மூலம் இந்திய ஜிம்னாஸ் டிக்ஸ் மீதான நம்பிக்கை சற்று தளர்ந்தது. ஆனால் 4 மாதங்களுக்குப் பிறகு தற்போது தீபா கர்மகார் காயத்தில் இருந்து குணமடைந்து போட்டிக்கு திரும்பி உள்ளதன் மூலம் மீண்டும் இந்திய ஜிம்னாஸ்டிக் மீது உலகின் பார்வை குவியத் தொடங்கியுள்ளது. அதிலும் ஜிம்னாஸ்டிக் வாழ்க்கைக்கே அச்சுறுத்தும் வகையிலான காயத்தில் இருந்து மீண்டுள்ள தீபா கர்மகார் துருக்கியில் நடைபெற்ற ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சேலஞ்ஜில் தங்கப் பதக்கம் வென்ற கையுடன், ஆசிய விளையாட்டில் கால்பதிக்கிறார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இம்முறை இந்திய ஆடவர் அணியில் ராகேஷ் பத்ரா, யோகேஷ்வர் சிங், கவுரவ் குமார், ஆஷிஸ் குமார், சித்தார்த் வர்மா ஆகியோரும் மகளிர் பிரிவில் தீபா கர்மகார், பிரனிதி தாஸ், அருணா புத்தா ரெட்டி, மந்திரா சவுத்ரி, பிரனிதி நாயக் ஆகியோரும் இடம் பெற்றுள்ள னர்.

தீபா கர்மகாரின் பயிற்சியாளரான பிஷ்வேஷ்வர் நந்தி கூறுகையில், “காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்பதில் தொடக்கத்தில் தீபா கர்மகார் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகளுக்கு அதிக காலம் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. முழங்கால் காயம் குணமடைய 2 ஆண்டுகள் எடுத்தது. அவர், மீண்டும் சர்வதேச அரங்குக்கு திரும்பியது அதிசயமே. ஆனால் தீபா போன்ற ஒரு போராளியிடம் நான் இதை எதிர்பார்த்தேன்.

ஜிம்ஸ்னாஸ்டிக்ஸை பொறுத்தவரை ஆசிய விளையாட்டு என்பது ஒரு மினி ஒலிம்பிக் போன்றதுதான். சீனா, ஜப்பான், தென் கொரியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒவ்வொரு பதக்கத்துக்கும் கடும் சவால் கொடுப்பார்கள். போட்டிகளின் முடிவுகளை யாராலும் கணிக்க முடியாது, நாங்கள் தீபா மீது உயர்மட்ட நம்பிக்கையை வைத்துள்ளோம். முதலில் அவர் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும். ஒரு நொடியில் செய்யும் சிறிய தவறுகூட உங்கள் நம்பிக்கையை குலைத்துவிடும்” என்றார்.

ஆடவர் பிரிவில் 26 வயதான ராகேஷ் பத்ராவும் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ரிங் பிரிவில் சிறப்பாக செயல்படக்கூடிய அவர், துருக்கியில் நடைபெற்ற ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சேலஞ்ஜில் 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் மெல்பர்னில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். காமன்வெல்த் போட்டியிலும் ராகேஷ் பத்ரா 4-வது இடத்தையே பிடித்திருந்தார். இந்த அனுபவங்களின் ஊடாக கூடுதல் திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் ராகேஷ் பத்ரா இம்முறை பதக்க மேடை ஏற வாய்ப்பு உள்ளது.

ஜிம்னாஸ்டிக்கிலும் சீனா இதுவரை அதிக பதக்கங்களை வேட்டையாடி உள்ளது. 132 தங்கம், 84 வெள்ளி, 34 வெண்கலம் என சீனா ஒட்டுமொத்தமாக 250 பதக்கங்களை அள்ளிக் குவித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜப்பான் 19 தங்கம், 30 வெள்ளி, 47 வெண்கலத்துடன் 96 பதக்கங்களையும், தென் கொரியா 17 தங்கம், 18 வெள்ளி, 33 வெண்கலத்துடன் 68 பதக்கங்களையும் கைப்பற்றி உள்ளன. இந்த வகையில் இந்தியா ஜிம்னாஸ்டிக்கில் ஒரே ஒரு வெண்கலப் பதக்கம் மட்டுமே பெற்றுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு ஆஷிஸ் குமார் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். இம்முறை இந்த நிலைமை மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x