Last Updated : 28 Jul, 2018 04:19 PM

 

Published : 28 Jul 2018 04:19 PM
Last Updated : 28 Jul 2018 04:19 PM

1986-ல் இங்கிலாந்தை 2-0 என்று வீழ்த்தியதை மறக்க முடியாது: சேத்தன் ஷர்மா பெருமிதம்

மொகமது ஷமி பந்து வீச்சில் தன் பந்து வீச்சு பாணியைக் கண்ட இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் ஷர்மா 1986 தொடரில் கபில் தேவ் தலைமையில் இங்கிலாந்தில் அந்த அணியை டெஸ்ட் தொடரில் 2-0 என்று வீழ்த்தியதில் முக்கியப் பங்குவகித்தவர்.

தான் விளையாடிய 23 டெஸ்ட் போட்டிகளில் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இங்கிலாந்தில் ஆடினாலும் தன் பந்து வீச்சுத் திறமையை அங்கு பதிவு செய்தார். கபில்தேவின் செல்ல சகோதரன் அல்லது அத்யந்த சிஷ்யனாவார் சேத்தன் ஷர்மா. கபில்தேவ் ஒரு சுடுசொல் சொன்னால் கூட அழுதுவிடுவார், ஒருமுறை ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு போட்டி ஒன்றில் லாங் ஆனில் முக்கிய கட்டத்தில் மிஸ்பீல்ட் செய்து பவுண்டரி கொடுத்து விடுவார் சேத்தன் ஷர்மா, கடும் கோபமடைந்த கபில்தேவ் மிஸ்பீல்டுக்கு கைதட்டினார், உடனேயே சேத்தன் சர்மா கண்களில் கண்ணீர், சட்டையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டதை இன்றும் மறக்க முடியாது.

அந்த இங்கிலாந்து தொடர், நடப்பு இங்கிலாந்து தொடர் குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு சேத்தன் ஷர்மா அளித்த பேட்டி வருமாறு:

1986 தொடர் மறக்க முடியாத ஒரு தொடர் பவுலர்கள் அனைவரும் எதிர்பார்ப்புக்கு மேல் வீசினர். இங்கிலாந்தில் 2-0 என்று தொடரைக் கைப்பற்றியது சிறப்பு வாய்ந்தது. அந்தத் தொடரில் விளையாடிய வீரர்களுக்கு அது மறக்க முடியாத ஒரு தொடராகும்.

என் பந்து வீச்சில் வேகமும் இருந்தது பந்துகள் எழும்பின, இப்போது உமேஷ் யாதவ், ஷமி வீசுவது போல் வீசினேன். ஷமி பந்தின் தையலைத் தரையில் அழுந்தப் படுமாறு வீசுகிறார், மேலும் தன் மணிக்கட்டை அபாரமாகப் பயன்படுத்துகிறார். பிட்சில் கொஞ்சம் உதவியிருந்தால் போதும் ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் அபாயகரமான பவுலர்களாக இருப்பார்கள்.

1986 தொடரில் டெஸ்ட்டுக்கு முன்னதாக சில பயிற்சிப் போட்டிகள் இருந்தன, நான் அவர்களை நன்றாகக் கணிக்க முடிந்தது, அதனால் நன்றாகத் தயார் செய்து கொண்டேன். (லார்ட்ஸ் டெஸ்டில் 6 விக்கெட்டுகளையும் எட்ஜ்பாஸ்டனில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் சேத்தன் சர்மா)

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது முதல் 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்தேன் சரியாக போட முடியவில்லை, திணறினேன். அப்போது என் பயிற்சியாளர் தேஷ் பிரேம் ஆசாத் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது வேறு முனையிலிருந்து வீசு என்று அவர் அறிவுறுத்தினார். இறக்கத்தில் நான் பந்து வீசினேன் சரியாக விழவில்லை, எதிர்முனையில் வீசவந்தவுடன் எல்லாம் சரியாகின. நான் தொடக்கத்தில் வீசாமல் 3ம் பவுலராக வீசினேன், கொஞ்சம் தேய்ந்த பந்து எனக்கு உதவியது.

நடப்புத் தொடரில் இஷாந்த், உமேஷ், ஷமி மூலம் நல்ல பந்து வீச்சு உள்ளது, ஸ்பின்னர்களும் தாக்கம் ஏற்படுத்த முடியும். இப்போது அங்கு வெயில் அடிப்பதால் இந்தியாவுக்குச் சாதகம் விராட் கோலி ரன்களைக் குவித்தால் இந்தியா நிச்சயம் வெல்லும்

இவ்வாறு கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x