Last Updated : 18 Jul, 2018 01:07 PM

 

Published : 18 Jul 2018 01:07 PM
Last Updated : 18 Jul 2018 01:07 PM

‘‘இப்படிப்பட்ட ஆடுகளத்தைப் பார்த்ததே இல்லை; உலகக்கோப்பைக்கு முன் சிறந்த அணியாக மாறுவது அவசியம்’’- கேப்டன் கோலி ஆதங்கம்

இங்கிலாந்தில் இப்படிப்பட்ட ஆடுகளத்தை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை, பந்துகள் மெதுவாகவும், வேகம் குறைந்து வருவது வியப்பாக இருந்தது. உலகக்கோப்பைப் போட்டிக்கு முன் அனைத்து வகையிலும் சமநிலையில் உள்ள அணியாக மாறுவது அவசியம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் நகரில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்தது. 259 ரன்கள் வெற்றி இலக்காகவைத்து விளையாடிய இங்கிலாந்து அணி 33 பந்துகள் மீதமிருக்கையில், இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து அணி. ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணிகைப்பற்றியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் மிகவலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டிருக்கும் அணிகளில் முக்கியமானது இந்திய அணி. ரோகித் சர்மா,ஷிகர் தவண், விராட் கோலி என முன்னணி வீரர்கள் இருந்தும் இந்தத் தொடரில் ஒருவரும் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக விளையாடவில்லை.

31 ஓவர்களுக்கு 156 ரன்கள் எடுத்த இந்திய அணி கடைசி 20 ஓவர்களில் 100 ரன்களே எடுக்க முடிந்தது, நடுவரிசை பேட்டிங்கில் பலவீனத்தைக் காட்டுகிறதா, அல்லது ஒட்டுமொத்த பேட்டிங் பலவீனத்தை சொல்கிறதா எனத் தெரியவில்லை.

கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 9 ஒருநாள் தொடரை கைப்பற்றி வீறுநடைபோட்டு வந்த நிலையில், முதல் சறுக்கலாக இந்தத் தோல்வி அமைந்திருக்கிறது.

இந்தப் போட்டிக்கு பின் ஊடகங்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இதுபோன்ற போட்டிகள்தான் எந்தவிதமான பிரிவில் நாங்கள் பின்னடைந்து இருக்கிறோம், பலவீனமாக இருக்கிறோம், உலகக்கோப்பைக்காக எந்த பிரிவை முன்னேற்ற வேண்டும் என்பதை கூறும்.

உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடும் அனைத்துத் தரப்பிலும் சிறப்பாக இருக்கும் வீரர்கள் கலந்த அணியாக மாறுவது அவசியமாகும். இதை உலகக்கோப்பைக்கு முன்பாக தயார் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு துறையில் மட்டும் சிறப்பாக இருப்பது போதாது, அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயலாற்ற வேண்டும்.

நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை இந்தப் போட்டியில் அடிக்கவில்லை. 30 ரன்கள் குறைவாகவே சேர்த்தோம். ஆனால், இங்கிலாந்து அணியினர் பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் ஆகிய 3 பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடினார்கள். இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து ஒரு சிறப்பான வெற்றியைப் பெறுவது அவசியம்.

இங்கிலாந்தில் இப்படி ஒரு ஆடுகளத்தை நான் இதற்கு முன் பார்த்தது இல்லை. வியப்பாக இருந்தது. பந்துகள் எழும்பாமல், மெதுவாகவும், எங்குச் சுழலும், ஸ்விங் ஆகும் தெரியாமல் விளையாடினேன். அதேசமயம் புதிய பந்துகள் அதிக வேகத்தில் வந்தன. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாகவும், பந்துகள் மெதுவாகவும் பேட்ஸ்மேன்களை குழப்பும்விதத்தி வந்தன.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினார்கள் குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகமான ரன்களை விட்டுக்கொடுக்காமல், சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

கடைசிப் போட்டியில் 3 மாற்றங்களைச் செய்தது குறித்து விமர்சிக்கப்படுகிறது. என்னைப் பொருத்தவரை இந்த மாற்றம் அவசியமானதுதான். தினேஷ் கார்த்திக் தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைச் சிறப்பாகவே பயன்படுத்தினார். ஷர்துல் தாகூருக்கு இன்னும்வாய்ப்புகள் கொடுக்கப் பட வேண்டும், புவனேஷ்குமார் இப்போதுதான் காயத்தில் இருந்து வந்திருக்கிறார்.

அடுத்து எங்கள் முன் இருக்கும் சவால் டெஸ்ட் தொடராகும். டெஸ்ட் போட்டிக்கான அணி வீரர்கள் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தொடர் மிக நீண்ட தொடராகும். டெஸ்ட் தொடர் மிகவும் கடினமான தொடராக இருக்கும்.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x