Last Updated : 19 Jul, 2018 08:52 AM

 

Published : 19 Jul 2018 08:52 AM
Last Updated : 19 Jul 2018 08:52 AM

தடைகளை தகர்க்கும் தங்க மங்கை ஹிமா தாஸ்

அசாம் மாநிலம் நகோன்  மாவட்டத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கக்கூடிய கந்துலிமரி என்ற கிராமத்தை சேர்ந்த18 வயதான ஹிமா தாஸ் கடந்த வாரம் பின்லாந்தில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச தடகள உலக சாம்பியன் ஷிப்பில் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பந்தய இலக்கை அவர் 51.46 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதன் மூலம் தடகளத்தில் டிராக் பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் அனைத்து வகையிலான வயது பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனையை நிகழ்த்தி உள்ளார் ஹிமா தாஸ்.

ஹிமா தாஸின் தங்கப் பதக்கம் போற்றப்படுவதற்கு காரணம் உலக சாம்பியன்ஷிப்பில் ஆப்பிரிக்கா, அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலையில் அவர்களுக்கு ஊடாக சாதித்ததுதான். ஹிமா தாஸ் 300 மீட்டர் வரை பின்தங்கிய நிலையில் தான் இருந்தார். ஆஸ்திரேலியாவின் எலா கொன்னோலி, ருமேனியாவின் அன்ட்ரியா மிக்லோஸ், அமெரிக்காவின் டெய்லர் மான்சன் ஆகியோரே முதல் மூன்று இடங்களை பிடிப்பார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் கடைசி 100 மீட்டரில்தான் ஹிமா தாஸ், மின்னல் வேகத்தில் செயல்பட்டார். 400 மீட்டர் ஓட்டத்தை பொறுத்தவரையில் இதுதான் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

புலி பாய்ச்சல் போன்று விரைந்த ஹிமா தாஸ் எலா கொன்னோலி, மிக்லோஸ், டெய்லர் மான்சன் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தார். இதில் ஹிமா தாஸின் வேகத்துக்கு மிக்லோஸ் (52.07), டெய்லர் மான்சன் (52.28) ஆகியோரால் மட்டுமே சற்று ஈடுகொடுக்க முடிந்தது. இதனால்தான் அவர்கள் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றனர். ஆனால் எலா கொன்னோலியால் (52.82) 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இங்குதான் ஹிமாதாஸின் மன வலிமை வெளிப்பட்டது.

உலக அளவில் 400 மீட்டர் ஓட்டத்தில் 1985-ம் ஆண்டு தொடரில் ஜெர்மனியைச் சேர்ந்த மரிட்டா கோச் இலக்கை 47.50 விநாடிகளில் கடந்ததே இன்றளவும் யாராலும் எட்ட முடியாத சாதனையாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் செக்குடியரசின் ஜர்மிலா 2-வது இடத்தில் உள்ளார். அவர் 1983-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் பந்தய தூரத்தை 47.99 விநாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார். இவரைவிட ஹிமா தாஸ் தற்போது 3.47 விநாடிகள் பின்தங்கியுள்ளார். இதேபோல் ஒலிம்பிக்கில் பிரான்ஸின் மரியே ஜோஸ் பெர்க் 1996-ம் ஆண்டு 48.25 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி சாதனை படைத்தார். இவரது சாதனையில் இருந்து 3.21 விநாடிகள் பின் தங்கியுள்ளார் ஹிமா தாஸ்.

20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பில் 1991-ம் ஆண்டு ஜெர்மனியின் கிரிட் புருயர் இலக்கை 49.42 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இந்த சாதனையில் இருந்து ஹிமா தாஸ் 2.04 விநாடிகள் பின்தங்கியிருக்கிறார். ஆசிய அளவில் பக்ரைனைச் சேர்ந்த சல்வா நசீர் இந்த ஆண்டில் பந்தய தூரத்தை 49.55 விநாடிகளில் கடந்து சாதனை நிகழ்த்தினார். இந்த சாதனையில் இருந்து ஹிமா தாஸ் 1.91 விநாடிகளில் பின்னோக்கி உள்ளார். வரும் காலங்களில் ஹிமா தாஸ் கூடுதல் திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் மேற்கண்ட ஏதேனும் ஒரு சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

இந்திய அளவில் 400 மீட்டர் ஓட்டத்தில் கடந்த 2004-ம் ஆண்டு மன்ஜித் கவுர் பந்தய தூரத்தை 51.05 விநாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்னர் பீனாமோல் பந்தய தூரத்தை 51.25 விநாடிகளில் கடந்திருந்தார். இந்தியாவின் தங்க மங்கை என கருதப்படும் பி.டி.உஷா 1985-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தடகளத்தில் பந்தய தூரத்தை 51.61 விநாடிகளில் கடந்திருந்தார். பி.டி.உஷாவை விட, ஹிமா தாஸ் (0.15 விநாடிகள்) சற்று முன்னேறிய வேகத்தில் உள்ளார். பின்லாந்து போட்டியில் ஹிமா தாஸ் ஹீட் பிரிவில் பந்தய தூரத்தை 52.25 விநாடிகளிலேயே கடந்திருந்தார். அதே வேளையில் அரை இறுதியில் 52.10 விநாடி

களில் இலக்கை அடைந் திருந்தார். படிப் படியாக தனது வேகத்தை அதிரித்த அவர், இறுதி சுற்றில் 51.46 விநாடிகளில் இலக்கை எட்டி அனைவரையும் வியக்க வைத்தார்.

அவரின் இந்த சீரான முன்னேற்றம் ஒரே தொடரில் இருந்து வெளிப்படவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை 51.32 விநாடிகளில் கடந்து 6-வது இடம் பிடித்தார். அந்தத் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற போஸ்ட்வானா வீராங்கனை அன்டில் மோன்ஷோவை 1.17 விநாடிகள் பின்தங்கியிருந்தார் ஹிமா தாஸ். தங்க மங்கையாக போற்றப்படும் ஹிமா தாஸ், இரண்டு வருடங்களுக்கு முன்புதான் ஓட்டப்பந்தய வாழ்க்கையையே தொடங்கினார் என்பதுதான் அனைத்திலும் கூடுதல் சிறப்பம்சம். குறுகிய காலத்திலேயே சாதனை படைத்துள்ள அவரது, குடும்பம் வறுமையான பின்னணியை கொண்டதுதான்.

ஹிமாவின் உடன்பிறந்தோர் 6 பேர். இவரது பெற்றோர் ரஞ்சித் தாஸ், ஜோனாலி தாஸ். இவர்கள் வாழும் நகோன் மாவட்டத்தில் விளையாட்டு மைதானமோ அல்லது வேறு எந்த அடிப்படை வசதிகளோ கிடையாது. 2016-ம் ஆண்டு வரை ஹிமா தாஸ் ஓட்டப் பயிற்சி செய்தது கால்நடைகள் மேய்ச்சலுக்காக அழைத்து வரப்படும் மைதானத்தில்தான். கால்பந்து விளையாடப்படும் இந்த மைதானம் ஆண்டில் மூன்று மாதங்கள் மழை நீரால் நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்துதான் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் ஹிமா தாஸ்.

எந்தவித வசதிகளும், உபகரணங்களும் இல்லாத சூழ்நிலையிலும் அதே ஆண்டின் இறுதியில் மாநில அளவிலான 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார் ஹிமா. இதன் பின்னர் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய இளையோர் சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற ஹிமாவால் 7-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. எனினும் அவர் பந்தய தூரத்தை 24.52 விநாடிகளில் கடந்திருந்ததால் நைரோபியில் நடைபெற்ற உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். ஆனால் அந்தத் தொடரில் ஹிமாவால் இலக்கை 24.31 விநாடிகளில் எட்டி 5-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

இதைத் தொடர்ந்து ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு சோதனை பிரிவில் 23.59 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். ஆனால் அதன் பின்னர் 400 மீட்டர் ஓட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தற்போது 20 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்

கம் வென்றதன் மூலம், அடுத்த மாதம் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஹிமா தங்கப் பதக்கம் வெல்லும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்ற கருத்து இப்போதே எழுந்துள்ளது. ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றாலும் அவரது கால்கள் ஓயாது. ஏனெனில் அவரது இலக்கு 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கை நோக்கியதாக இருக்கும். காத்திருப்போம் ஆசிய விளையாட்டு போட்டிக்காக.

ஹிமாவின் உடன்பிறந்தோர் 6 பேர். இவரது பெற்றோர் ரஞ்சித் தாஸ், ஜோனாலி தாஸ். இவர்கள் வாழும் நகோன் மாவட்டத்தில் விளையாட்டு மைதானமோ அல்லது வேறு எந்த அடிப்படை வசதிகளோ கிடையாது.

எந்தவித வசதிகளும், உபகரணங்களும் இல்லாத சூழ்நிலையிலும் 2016-ம்  ஆண்டின் இறுதியில் மாநில அளவிலான 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார் ஹிமா.

தங்க மங்கையாக போற்றப்படும் ஹிமா தாஸ், இரண்டு வருடங்களுக்கு முன்புதான் ஓட்டப்பந்தய வாழ்க்கையையே தொடங்கினார் என்பதுதான் அனைத்திலும் கூடுதல் சிறப்பம்சம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x