Published : 26 Jun 2018 06:31 PM
Last Updated : 26 Jun 2018 06:31 PM

நெய்மர் அல்ல கூட்டின்ஹோதான் பிரேசிலின் ஹீரோ: முன்னாள் பிரேசில் நட்சத்திரம் காகா திட்டவட்டம்

நடப்பு உலகக்கோப்பையில் பிரேசிலுக்கு முக்கிய வீரர் கூட்டின்ஹோதான், நெய்மர் அல்ல என்று பிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் காகா தெரிவித்துள்ளார்.

ஈஎஸ்பிஎன் கால்பந்து இணையதளத்துக்கு காகா கூறும்போது, “நெய்மர் எங்கள் சிறந்த வீரர். மேலாளர் டீட்டே நெய்மரை அருமையாகவே நிர்வகிக்கிறார்.

அணி வலுவாக உள்ளது ஆனால் ஹீரோ என்றால் இப்போதைக்கு கூட்டின்ஹோதான். பிரேசிலின் தீர்மானகரமான ஒரு வீரர் கூட்டின்ஹோ.

நெய்மர் காயத்திலிருந்து மீண்டு கொண்டிருக்கிறார், அவரை உணர்ச்சி ரீதியாகக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அவர் நிச்சயம் சாதிப்பார். நெய்மரிடம் ஆட்டத்தில் கற்பனை வளத்துக்கோ உத்திக்கோ பஞ்சமில்லை. அவர் உடல் ரீதியாக 100% தயாராக வேண்டும். பிரேஸில் தனது 6வது உலகக் கோப்பையை வெல்ல அவர் உதவ வேண்டும்” என்றார்.

காகா, 2002, 2006, 2010 உலகக்கோப்பைகளில் ஆடியுள்ளார்.

அவர் மேலும் கூறிய போது, “ஒவ்வொரு ஆட்டத்திலும் நெய்மர் முன்னேறி வருகிறார், முதல் ஆட்டம் பதற்றமாக இருந்தார் அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த அணியுமே பதற்றமாகக் காணப்பட்டது. உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டம் என்றால் அது எப்படிப்பட்டது என்பது எனக்குத் தெரியும். உணர்ச்சிகரம், கவலை, பதற்றம் அனைத்தும் இருக்கும்.

நெய்மர் மீதான அழுத்தம் வழக்கத்துக்கு மாறானது, அவர் தன்னை உணர்ச்சி ரீதியாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விமர்சனங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் அவர் பழக வேண்டும்.

போர்ச்சுகல் எப்படி கிறிஸ்டியானோ ரொனால்டோவைக் கையாண்டதோ அப்படித்தான் நெய்மரை பிரேசில் கையாள வேண்டும். அவர் சிறப்பாக ஆட அவரை சவுகரியமான ஒரு மனநிலையில் ஆட வைக்க வேண்டும். களத்தில் கோல்கள் அடித்து மக்களை மகிழ்விப்பதுதான் அவர் வேலை அதை அவர் செய்ய தடையில்லாமல் அவரைத் தயார் படுத்த வேண்டும்” என்றார் காகா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x