Last Updated : 08 Jun, 2018 08:53 AM

 

Published : 08 Jun 2018 08:53 AM
Last Updated : 08 Jun 2018 08:53 AM

குரோஷியாவை தாங்கிப்பிடிக்கும் நடுகள வீரர்கள்

ந்தாவது முறையாக குரோஷியா அணி, உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னேறியுள்ளது. ஃபிபா தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் குரோஷியா அணியில்உலகத் தரம் வாய்ந்த கால்பந்து வீரர்கள் நிறைந்திருந்தபோதிலும் அந்த அணியால் இதுவரை கோப்பையைக் கைப்பற்ற முடியவில்லை. அதிகபட்சமாக 1998-ல் அரை இறுதி வரை அந்த அணி முன்னேறியிருக்கிறது.

இந்த முறை உலகக் கோப்பைத் தொடரில் பலம் வாய்ந்த குரூப் டி-யில் குரோஷியா இடம்பெற்றுள்ளது. இந்த குரூப்பில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாகக் கருதப்படும் அர்ஜென்டினாவும் உள்ளது. எனவே அந்த அணிக்கு முதல் சுற்றைத் தாண்டுவதே கடினமான இலக்காக இருக்கும் என்று கால்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர். ஆனாலும் பலம்வாய்ந்த நடுகள வீரர்கள் குரோஷியா அணியைத் தாக்கிப் பிடிக்கிறார்கள்.

அணியின் பலமாக இருப்பது ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் மாட்ரிக்கும், மட்டியோ கோவாசிக்கும். இதேபோல பார்சிலோனா அணிக்காக களமிறங்கி கலக்கி வரும் இவான் ராகிடிக்கும், இன்டர்மிலன் அணிக்காக விளையாடும் இவான் பெரிசிக்கும், மார்செலோ புரோசோவிக்கும் அணியின் தூண்களாக எதிரணியை மிரட்டுகின்றனர். இவர்கள் அனைவருமே உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்லாமல் ஜுவென்டஸ் அணிக்காக விளையாடும் மரியோ மான்ட்ஜுகிக், மிலனுக்காக ஆம் நிகோலா காலினிக், ஹோபன்ஹெய்ம் அணிக்காக சாதனை புரியும் ஆந்திரஜ் கிராமரிக்கும் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளனர்.

நடுகளத்தில் மின்னலென பாயும் வீரர்களாக கேப்டன் லுகோ மாட்ரிக், கோவாசி, இவான் ராகிடிக், இவான் பெரிசிக், மார்செலோ புரோசோவிக் ஆகியோர் உள்ளனர். அணியைத் தாங்கிப் பிடிக்கும் அசகாய சூரர்களும் இவர்கள்தான். இவர்களை நம்பியே அணி உலகக் கோப்பை களத்தில் குதிக்கிறது. உலக கால்பந்து வீரர்களில் மிகச் சிறந்த நடுகள வீரர்கள் வரிசையில் லுகோ மாட்ரிக்கும் ஒருவர்.

அதே நேரத்தில் இதுவரை குரோஷியா அணி உலகக் கோப்பைத் தொடரில் அரை இறுதியைத் தாண்டியதில்லை. அது ஒரு பெரும் பலவீனமாக பார்க்கப்படுகிறது. யுகோஸ்லேவியாவிலிருந்து பிரிந்த பின்னர் முதன்முறையாக 1998-ல் உலகக் கோப்பையில் குரோஷியா பங்கேற்று அரை இறுதி வரை சென்றது. ஆனால் பலம்பொருந்திய பிரான்ஸிடம் தோல்வி கண்டு வெளியேறியது குரோஷியா. ஆனால் இம்முறை நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற வேகம் வீரர்களிடையே உள்ளது.

தற்போது பயிற்சியாளராக உள்ள டாலிக், போதிய அனுபவம் இல்லாதவர். மேலும் நெருக்குதலான ஆட்டத்தின்போது அவர் மிகவும் பதற்றமாக காணப்படுகிறார். அவர் பதற்றமாக இருக்கும் பட்சத்தில் அது அணியினரிடையே எதிரொலிக்கும். மேலும் குரோஷியா அணி தடுப்பாட்டத்தில் மிகவும் பலம் குறைந்த அணியாக பார்க்கப்படுகிறது. மூத்த வீரர் வேத்ரன் கோர்லுகா காயமடைந்து தற்போதுதான் அணிக்குத் திரும்பியுள்ளார். ஆனால் அணி வீரர்களை அரவணைத்துச் செல்லும் புதுப் புயலாக இருக்கிறார் கேப்டன் லுகோ மாட்ரிக். 32 வயது குரோஷிய சூப்பர் ஸ்டாரான லுகோ, தங்களது நாட்டுக்கு கோப்பையை வாங்கி வருவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x