Published : 12 May 2018 06:48 PM
Last Updated : 12 May 2018 06:48 PM

‘ஒரு பக்கம் வக்கார் யூனுஸ், மறுபக்கம் அக்ரம்: இதோடு கிரிக்கெட் வாழ்வு முடிந்தது என நினைத்தேன்’-முதல் டெஸ்ட் பற்றி சச்சின் சுவாரஸ்யம்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்த போது பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டி அனுபவம் குறித்து சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களிடம் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார்.

கவுரவ் கபூர் தொகுத்து வழக்கும் 'பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்' எனும் நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்று தனது கிரிக்கெட் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

இதில் தான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சச்சின் டெண்டுல்கர் விளக்கியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

''சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதுதான் எனக்கு முதல் அனுபவம். பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி, மிகவும் குறைந்த வயதில் சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைத்தேன். நான் பேட் பிடித்து, மைதானத்தில் நடந்து வருவதைப் பார்த்த பாகிஸ்தான் வீரர்கள் சிலர் சிரித்தனர்.

முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் நான் பேட் செய்தபோது, எனக்குப் பதற்றமாக இருந்தது. ஒருபுறம் வக்கார் யூனுஸ், மறுபுறம் வாசிம் அக்ரமின் மிரட்டல் பந்துவீச்சு. என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னுடைய முதல் இன்னிங்ஸோடு, என்னுடைய கிரிக்கெட் வாழ்வு அஸ்தமிக்கப் போகிறது என்று பயந்தேன். யூனுஸும், அக்ரமும் ரிசவர்ஸ் ஸிவிங் பந்து வீசி என்னை மிரட்டினார்கள். முதல் இன்னிங்ஸில் ஹெல்மெட்டில் அடிபட்டு, ஆட்டமிழந்தேன்.

ஓய்வு அறையில் அணியின் மூத்த வீரர்கள் அனைவரும் எனக்கு ஊக்கம் அளித்து, தைரியம் அளித்தனர். துணிச்சலாக விளையாடு, தேவையான அளவு நேரம் எடுத்துக்கொண்டு ரன்களே அடி, நிதானமாக விளையாடு, பயப்படாதே.

இது சர்வதேச கிரிக்கெட் போட்டி, உலகின் அதிவேகமான பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்கிறாய். அமைதியாக, நிதானமாக பேட் செய்து என்று எனக்கு மூத்த வீரர்கள் அறிவுரை கூறினார்கள். 2-வது இன்னிங்ஸில் கவனமாக பேட் செய்து 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தேன்.

மீண்டும் ஓய்வு அறைக்குச் சென்று கண்ணாடி முன்என்னைப் பார்த்து, நீ சாதித்துவிட்டாய் என்று பெருமையாகக் கூறிக்கொண்டேன்.

நேரம் தவறாமை

நேரம் தவறாமையையும், ஒழுக்கத்தையும் கிரிக்கெட்டின் தொடக்கத்தில் நான் கடைபிடிக்கவில்லை. அணி வீரர்கள் எங்காவது புறப்பட வேண்டும் காலை 8 மணிக்கு வந்துவிடுங்கள் என்று அணி நிர்வாகம் அறிவுறுத்தினால், நான் 10 நிமிடங்கள் கூட தாமதமாக வருவேன். உன்னுடைய மூத்த வீரர்கள் உனக்காக காத்திருக்கிறார்கள், நீ இப்படி தாமதமாக வருவதா என்று என்னை மூத்த வீரர்கள் கண்டித்திருக்கிறார்கள். அதன்பின், நேரம் தவறாமையையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்கத் தொடங்கினேன்.

பேட்டை மாற்றவில்லை

எனக்கு டென்னிஸ் எல்போ பகுதியில் காயம் ஏற்பட்டபோது, எல்லோரும் என்னுடைய பேட்டின் எடையைக் குறைத்துவிடு என்று அறிவுரை கூறினார்கள். ஒரு கோடி டாக்டர்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள ரசிகர்களான ஒரு கோடி பயிற்சியாளர்கள் எனக்கு அறிவுரை கூறி, எடை குறைவான வேறு பேட்டுக்கு மாறிவிடு என்றனர். ஆனால், கடைசிவரை அதே எடைகொண்ட பேட்டைத்தான் பயன்படுத்தினேன். என்னுடைய பேட்டை ஒருபோதும் மாற்றவில்லை. எடை குறைவான பேட்டை பயன்படுத்திப் பார்த்தேன், ஆனால், நான் அதிரடியாக ஆடும்போது, பேட்டின் கைப்பிடி சுத்தத் தொடங்கியது. அது முதல் எடை குறைவான பேட்டை பயன்படுத்துவதில்லை.''

இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x