Last Updated : 27 Apr, 2018 06:39 PM

 

Published : 27 Apr 2018 06:39 PM
Last Updated : 27 Apr 2018 06:39 PM

என் பையிலும்தான் உப்புக் காகிதம் உள்ளது, எதற்குப் பயன்படுத்துகிறேன் தெரியுமா?- டிவில்லியர்ஸ்

ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் பால் டேமப்ரிங் விவகாரத்தை உலகம் அந்த மூவரையும் தனிப்பட்ட முறையில் பாதிக்கும் அளவுகு ஊதிப்பெருக்கப்பட்டுள்ளது என்று தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் வருந்தியுள்ளார்.

தி கார்டியன் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘அவர்களுக்காக வருந்துகிறேன், குறிப்பாக ஸ்மித்துக்காக மிகவும் வருந்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தென் ஆப்பிரிக்கா தொடர், பால் டேம்பரிங் சர்ச்சை, ஸ்லெட்ஜிங் பற்றி தன் கருத்துகளைக் கூறும்போது, “பால் டேம்பரிங் உள்ளிட்ட அந்தத் தொடரின் சர்ச்சைகள் மிகவும் தொந்தரவு தருபவை. ஆனால் நான் பங்காற்றியதில் சிறந்த டெஸ்ட் தொடர் அது. மோசடிகள் நடந்தன ஆனால் கிரிக்கெட் ஆட்டம், நாங்கள் செலுத்திய ஆதிக்கம் நினைவுகொள்ளத் தக்கது.

சில வேளைகளில் நாம் திரும்பிப் பார்க்கும் போதுதான் நம் சாதனைகள் நமக்குப் புரியவரும். டர்பன் போலவே நாங்கள் வீழ்ந்திருப்போம். ஆனால் அப்போது சிறப்பான ஒரு சதம் எடுத்தது, அதனால் அணி வெற்றிபெற்றது நம்பமுடியாத தருணமாக இப்போது தோன்றுகிறது. என்னுடைய சதங்களில் சிறந்தது அது.

அப்படிப்பட்ட பேட்டிங் எப்போதும் அமையாது, நான் பிட்சில் அமைதியாக இருந்தேன். விநோதமானது சில வேளைகளில் நம் மண்டைக்குள் அமைதி ஏற்படுகிறது. அது போன்ற நாட்கள் அடிக்கடி வருவதில்லை. அதனால் அத்தருணங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.

கடினமான கிரிக்கெட்தான் ஆனால் டெஸ்ட் போட்டிகள் அதன் அனைத்து தன்மைகளுடன் ஆடப்படவேண்டும், ஸ்லெட்ஜிங் உட்பட. இன்னும் கூட தனிநபர் தாக்குதலுக்குச் செல்லாத கோடு ஒன்று உள்ளது என்று பேசுகின்றனர். ஆனால் தொடர் நடக்கிறது அதனை நாம் இழக்கவும் முடியாது.

ஆஸ்திரேலியர்கள் மிகவும் தனிநபர் அந்தரங்கத் தாக்குதல் தொடுப்பவர்கள். எங்கள் வீரர்களில் ஒருவரும் அப்படிச் செய்தார் (டி காக்), இது ஒரு பெரிய கதை. ஆனால் கிரிக்கெட்டை சவாலாக ஆடுவது எனக்குப் பிடிக்கும். மீதியெல்லாம் தேவையற்றது.

ஆம்! சாண்ட்பேப்பர், பால் டேம்பரிங் விவகாரம் ஊதிப்பெருக்கப்பட்டது. இது பொறுப்பான விஷயம்தான், ஆனால் அதற்காக அதைப் பெருக்கிய விதம் 3 வீரர்களின் சொந்த வாழ்க்கையையே பாதித்து விடும் அளவுக்குப் போகக்கூடாது. அவர்களுக்காக நான் வருந்துகிறேன். குறிப்பாக ஸ்மித். வீரர்களுக்காக தான் சரியான காரியத்தைத்தான் செய்தோம் என்று அவர் நம்பினார். ஆனால் அவரைத் தண்டித்த விதம் கொஞ்சம் கடுமையானது.

தவறென்றால் தவறுதான். பந்துகளை ரிவர்ஸ் ஸ்விங் செய்யவைக்க வீரர்கள் வழி கண்டுபிடிக்கலாம் ஆனால் அது விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். சாண்ட் பேப்பர்? நானும் என் பையில் வைத்திருக்கிறேன். ஆனால் என் மட்டையை சுத்தம் செய்வதற்குத்தான் அதைப் பயன்படுத்துகிறேன்.

(போர்ட் எலிசபெத் இன்னிங்ஸ் மாதிரி ஒன்றை ஆட முடியுமா?), ஆடலாம், ஆடாமலும் போகலாம். ஓய்வு பெற்றிருப்பேன். நான் மீண்டும் டெஸ்ட் போட்டிக்குள் வந்த போது எனக்கு 23 வயது என்றே நினைத்துக் கொண்டேன். அது ஒரு கனவு. அப்படித்தான் ஆட விரும்புகிறேன்.

‘ஐபிஎல் சம்பளம் உதவுகிறது’

மக்கள் உங்களை ஹீரோ என்ற இடத்துக்குக் கொண்டு செல்வார்கள், ஆனால் நான் என் குடும்பம் என்று நார்மலான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். ஐபிஎல் ஆட வந்த போது எனக்கு வசைதான் விழுந்தது. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டை என்னால் மிஸ் செய்ய முடியாது. இந்த விஷயத்தில் நான் உங்களிடம் பொய் சொல்ல முடியாது. நிதியளவில் எனக்கும் என் குடும்பத்துக்கும் பெரிய அளவில் இது உதவுகிறது. 7 வாரங்கள் வெளியே இருப்பது கடினம்தான் ஆனாலும் தவிர்க்க முடியாது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள். அதனால் அவர்களுக்குத் தேவையிருக்காது. ஆனால் மற்றவர்களுக்கு ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு நிதியளவில் மிக முக்கியமானது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் போது சில டாலர்கள் வங்கியில் இருப்பது நல்லதுதானே.

2015-ல் நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம், உலகக்கோப்பை என்பது ஒரு வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடாது என்பதுதான். அரையிறுதிக்குப் பிறகு மனம் உடைந்து போனேன், விடைகள் தேடியலைந்தேன். இப்போது மாறிவிட்டேன், 2019-ல் உலகக்கோப்பையை வெல்லும் தெ.ஆ.அணியில் வீரராக இருக்க விரும்புவேன், இல்லையென்றால் அது என் கரியரைத் தீர்மானிக்காது என்று முடிவுக்கு வந்துள்ளேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x