Published : 25 Apr 2018 03:11 PM
Last Updated : 25 Apr 2018 03:11 PM

ஜூன்18 2017, சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் தோல்வி: 2019 ஜூன் 16-ல் பாக்.உடன் உ.கோப்பையில் மோதல்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 16-ம் தேதி ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பலப்பரிட்சையில் இறங்குகின்றன.

1992ம் ஆண்டு நடந்தது போல் 10 அணிகளும் ஒருவரை எதிர்த்து மற்றவர்கள் மோதும் வடிவத்துக்கு உலகக்கோப்பை 2019 திரும்புகிறது. மொத்தம் 46 நாட்களில் 48 போட்டிகள்.

இதில் டாப் 4 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்த வடிவத்தில் உள்ள பிரச்சினை இந்த அரையிறுதி இறுதிப் போட்டிகள்தான். காரணம் 1992-ல் நியூஸிலாந்து அணி அதிகப் போட்டிகளை வென்றது, அப்போது அந்த அணிதான் உலக சாம்பியன். மாறாக 4-5 போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் இம்ரான் தலைமையில் கோப்பையை வென்றது. அதுவும் இங்கிலாந்துக்கு எதிராக 78 ரன்களுக்கு மடிந்த பாகிஸ்தான் மழையினால் அந்தப் போட்டியில் சமபுள்ளிகளைப் பெற்று கிரேட் எஸ்கேப் ஆனது. ஒருவேளை தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போட்டி டக்வொர்த் முறையில் மோசமான முடிவுக்குச் சென்று 3 ஓவர்களில் 21 எடுத்தால் என்ற நிலைமாறி வெற்றி பெற முடியாத சாத்தியத்துக்குச் சென்றதால் இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, இங்கிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்துவது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். ஒருவேளை தென் ஆப்பிரிக்கா வந்திருந்தால் (அந்த அணிதான் வந்திருக்க வேண்டும் என்பது வேறு விஷயம்) பாகிஸ்தான் தோற்பது உறுதியாகியிருக்கலாம்.

ஒவ்வொரு அணியும் மற்றவர்களுக்கு எதிராக ஆடும்போது ஒரு அணி வெற்றி பெற்று கொண்டே வருகிறது ஆனால் திடீரென அரையிறுதியில் அது தோல்வி கண்டால் வெளியேறுவது எந்த விதத்தில் நியாயமாகும்?

2019 உலகக்கோப்பை மே மாதம் 30ம் தேதி இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா மோதலுடன் தொடங்குகிறது. இங்கிலாந்து முழுதும் 11 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. ஜூலை 14ம் தேதி லார்ட்ஸ் தனது 5வது உலககக் கோப்பை இறுதிப் போட்டியை காண்கிறது.

லார்ட்ஸ், ஓவல், எட்ஜ்பாஸ்டன், டிரெண்ட் பிரிட்ஜ், ஹெடிங்லே, ஓல்ட் ட்ராபர்ட், டாண்டன், பிரிஸ்டல், செஸ்டர் லீ ஸ்ட்ரீட், சவுதாம்ப்டன், கார்டிப் ஆகிய மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.

மொத்தம் 7 பகலிரவு ஆட்டங்கள் நடைபெறுகின்றன, இதில் ஜூன் 2ம் தேதி ஆஸ்திரேலியா அணி ஆப்கானை எதிர்கொள்கிறது.

1999 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொண்டு இந்திய அணி வீழ்த்திய அதே மைதானத்தில்தான் 2019 உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது, இந்தப் போட்டிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் குவிவார்கள் என்று இசிபி எதிர்பார்க்கிறது.

இங்கிலாந்தில் கடைசியாக 2017 ஜூன் 18-ல் மோதிய போது சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பகார் ஜமான் சதத்துடன் பாகிஸ்தான் 338/4 என்று விளாச, இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் அதிரடி 76 ரன்களுடன் 158 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆமிர், ஹசன் அலி இந்திய அணியைப் பதம் பார்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x