Published : 20 Apr 2018 08:56 PM
Last Updated : 20 Apr 2018 08:56 PM

இனி டி20 கிரிக்கெட்டுக்கும் மாற்றா? : எதிர்காலத்தின் கிரிக்கெட் 100 பந்துகள்

 

கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கிலும், அதிகமான பார்வையாளர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கவும் முடிவு செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டி20 போட்டிகளுக்கு பதிலாக 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது.

5 நாட்கள் நடந்த டெஸ்ட் போட்டிகளை ஓரம் கட்டி, 60 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகள் வந்தன. அதிலும் முடிவு கிடைக்க ஒருநாள் தேவைப்படுகிறது என்பதாலும், சில நேரங்களில் மழை போன்ற இயற்கை இடையூறுகளாலும் போட்டி தடைபடுவதால், 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.

அதன்பின் கிரிக்கெட் போட்டியை முழுபொழுதுபோக்கு அம்சமாக மாற்றும் நோக்கில் 20 ஓவர்கள்(120பந்துகள்) கொண்ட போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த போட்டிகள்தான் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை இன்றுவரை குஷிப்படுத்தி வருகிறது. ஏறக்குறைய ஒரு சினிமா பார்ப்பது போன்று ஒரு போட்டிக்கான முடிவை இரண்டரை மணிநேரத்தில் ரசிகர்கள் அறிந்துவிடுகிறார்கள்.

இதற்கிடையே ஹாங்காங் 6 ஓவர்கள் கிரிக்கெட் என்றெல்லாம் கொண்டுவந்தாலும் அதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு இல்லை. அதற்கு காரணம் நிலையான கிரிக்கெட் அமைப்பு அதை அறிமுகம் செய்தாதத.

ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், வித்தியாசமாக 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்கவும், ரசிகர்களை கவர்ந்திழுக்கவும் இந்த போட்டியை நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது.

அதாவது 15 ஓவர்களுக்கு ஒவர்களுக்கு 6 பந்துகள் வீதம் இருக்கும். 16-வது ஓவரில் மட்டும் 10 பந்துகள் வீசப்படும். வழக்கமான டி20 போட்டியில் 120 பந்துகள் வீசப்படும் நிலையில், இதில் 100 பந்துகள் மட்டுமே வீசப்படும்.

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாம் ஹாரிசன் கூறுகையில், கிரிக்கெட் விளையாட்டை இன்னும் உற்சாகமாக விளையாடவும், மகிழ்ச்சிகரமான போட்டியாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாற்ற இந்த 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்துகிறோம்.

இந்த போட்டி வரும் 2020ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அனைத்து நாடுகளையும் அழைத்து நடத்தப்படும். சவுத்தாம்டன், பிரிம்மிங்ஹாம், லீட்ஸ், லண்டன், மான்செஸ்டர், கார்டிப், நாட்டிங்ஹாம் ஆகிய நகரங்களில் இந்த போட்டிகள் நடத்தப்படும்.

2020 முதல் 2024ம் ஆண்டுவரையிலான போட்டிகளை பிபிசி நேரடியாக ஒளிபரப்பும். இந்த கிரிக்கெட் போட்டி நிச்சயம், அனைத்து கிரக்கெட் ரசிகர்களையும், குடும்பத்தையும் ஈர்க்கும். இளம் ரசிகர்கள் கிரிக்கெட் பார்க்க ஆர்வப்படுவார்கள், கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் அதிகமாகும் எனத் தெரிவித்தார்.

இந்த 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து வீரர்களும் வரவேற்றுள்ளனர். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில், இந்த கிரிக்கெட் போட்டியை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். மற்ற போட்டிகளைக் காட்டிலும் இந்த போட்டி வித்தியாசமானதாகவும், ஆர்வமாகவும் இருக்கும். 15 ஓவர்கள், கடைசி ஓவரில் 10 பந்துகள் என்பது கேட்கவே உணர்ச்சிகரமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x