Published : 27 Apr 2024 05:35 AM
Last Updated : 27 Apr 2024 05:35 AM

ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற முடியாது: சொல்கிறார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ்

ஹைதராபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல்சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன் குவித்தது. ரஜத் பட்டிதார் 20 பந்துகளில், 50 ரன்களும் விராட் கோலி 43 பந்துகளில், 51 ரன்களும் கேமரூன் கிரீன் 20 பந்துகளில், 37 ரன்களும் விளாசினர்.

207 ரன்கள் இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 8 விக்கெட்கள் இழப்புக்கு 171ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஷாபாஷ் அகமது 40, அபிஷேக் சர்மா 31 ரன்கள் சேர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக அடைந்த 6 தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது பெங்களூரு அணி. அந்த அணி9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் தொடர்கிறது. அதேவேளையில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்த ஹைதராபாத் அணிக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஹைதராபாத் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்துக்குப் பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது: இந்த ஆட்டம் எங்களுக்கானதாக அமையவில்லை. பந்துவீச்சில் சில ஓவர்களில் நாங்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். மேலும் துரதிருஷ்டவசமாக பேட்டிங்கிலும் தொடக்கத்திலேயே விரைவாக விக்கெட்டுகளை இழந்தோம். முதலில் பேட்டிங் செய்தால் எங்களால் நிறைய ரன்களை அடிக்க முடிகிறது. அது எங்களுக்கு நன்றாக வேலையும் செய்கிறது. தொடக்கத்தில் சில வெற்றிகளை பெறுவதற்கு முன்னதாக நாங்கள் முதலில் பந்து வீசினால் வெற்றி பெறுவோம் என்று நம்பி இருந்தோம். ஆனால் அது எங்கள் வழியில் செல்லவில்லை. அதன் பின்னரே அணுகுமுறையை மாற்றினோம்.

டி 20 கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற முடியாது. இதனால் இதைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம். பேட்டிங்கில் அதிரடி அணுகுமுறை எல்லா ஆட்டத்திலும் வேலை செய்யாது. தொடக்கத்தில் எங்கள் வழியில் செல்லாத ஓரிரு ஆட்டங்களில், நாங்கள் பேட்டிங்கில் சிறந்த ஸ்கோரை பெற முடிந்தது. எங்களது வீரர்கள் முன்னேற்றம் காண்பதற்கு இதுவே சிறந்த வழி என்று கருதுகிறோம். இவ்வாறு பாட் கம்மின்ஸ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x